நடிகர்கள் மம்மூட்டியும் துல்கர் சல்மானும் தேர்வு செய்கிற கதைகள் ரசிகர்களிடம் தனி கவனத்தைப் பெற்று வருகின்றன.

கடந்த வாரம் (நவ. 20) இரண்டு திரைப்படங்கள் கவனம் பெற்றன. தமிழில் வெளியான ஓ.ம் தெலுங்கில் எடுக்கப்பட்ட ஆகாஷம்லோ ஒக தாரா. நடிகர் மம்மூட்டி ஓ.மில் வில்லனாகவும் துல்கர் ஏஓடியில் நாயகனாகும் நடித்திருந்தனர். இத்திரைப்படங்களில் இவர்கள் இல்லாமல் இருந்திருந்தாலும் ஒன்றுமில்லைதான். இருந்தும் மிதமான வெற்றிகளுக்கு இருவரின் பங்கும் தனித்துவமாக அமைந்திருக்கிறது. இந்திய சினிமா பல தந்தை - மகன் நடிகர்களை கண்டுவிட்டது. அதில் சிலர் நட்சத்திர அடையாளங்களை அடைந்திருக்கின்றனர். ஆனால், மம்மூட்டி - துல்கர் பல வகைகளில் உதாரணமாக விளங்கும் தந்தை - மகன் கலைஞர்கள்.

தங்களுக்கு ஆரோக்கியமான வணிகம் இருந்தும் ஒவ்வொரு முறையும் நல்ல கதைகளுக்காக அதனைக் குறித்து கவலை கொள்ளாமல் பல நேரங்களில் ஒரு படி இறங்கியே நடிக்கின்றனர். இருவரிடமும் இருக்கும் பாராட்டத்தக்க ஒற்றுமைகளில் ஒன்று எல்லா விதமான கதைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து அதில் தங்களைப் பொறுத்திக்கொள்ள முயல்வது. சொல்ல வேண்டிய கதையாக இருந்தால் அதில் நடிக்க மிகுந்த முனைப்பு காட்டுவது. அதே நேரம், புதுமையான கதைக்களம் என்பதாலேயே தயாரிப்பாளர்களுக்கு அது சுமையாகி விடக்கூடாது என இருவரும் சொந்தமாக அக்கதைகளைத் தயாரிப்பது.

ஆவியைப் பழிவாங்குகிற கதை (ரோர்சார்ச்), ஆவியால் தடுமாறுகிற கதை (நண்பகல் நேரத்து மயக்கம்), தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கதை (காதல் தி கோர்) பெண்களை உடல் தேவைக்காக பயன்படுத்திக் கொல்லும் சீரியல் கில்லர் கதை (களம்காவல்) என மம்மூட்டியிடம் இதெல்லாம் சொல்லலாமா எனத் தயக்கப்படும் கதைக்கருக்கள் எல்லாம் திரைப்படங்களாக மாறிவிட்டன.

துல்கர் சல்மானும் தன் பங்கிற்கு காந்தா போன்ற திரைப்படத்தைத் தயாரித்து சிறந்த நடிப்பைக் கொடுத்தார். அதன் வணிகம் எதிர்பார்த்ததைச் செய்யவில்லை என்றாலும் கதைகளின் மீதான துல்கர் சல்மானின் ஆர்வம் அலாதீயான ரசனை கொண்டது எனப் புரிந்தது. லோகாவை அதனால்தான் உருவாக்க முடிகிறது. ஏஓடி போன்ற படத்தில் இருக்கலாம் என எண்ண வைக்கிறது.

துல்கர் சல்மான் வெவ்வேறு நேர்காணல்களில், “சிறுவயதில் அப்பாவைப் போல் ஆக வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒருகட்டத்தில் அவரைப் போல் ஆக முடியாது எனத் தெரிந்துவிட்டது. அப்பா அபூர்வமாக பிறக்கும் சிலரைப் போன்றவர். அவர்களை நாம் மீறிச் செல்வது அசாத்தியமானது. என் சினிமா ஆர்வத்தைச் சொன்னபோது அவர் என்னிடம், ‘உனக்காக யாரிடமும் வாய்ப்புகளைக் கேட்க மாட்டேன். வெற்றியோ தோல்வியோ அது உனக்கானது; விமர்சனங்களை நீயே எதிர்கொள்ள பழக வேண்டும்’ எனச் சொன்னார். சில வெற்றிகளுக்குப் பின் சில திரைப்படங்கள் சரியாக அமையாத போது என்னை அழைத்து, ”உனக்கு ஏதாவது கடனோ இல்லை சகோதரிகளைத் திருமணம் செய்து வைக்கும் நெருக்கடியோ இருக்கிறதா? இல்லையென்றால், நல்ல திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்து” என்றார். அப்பாவின் இடத்தை என்னால் ஒருபோதும் நிரப்ப முடியாது. ஆனால், அவரின் மகன் என்கிற அடையாளத்திற்குள்ளும் இருக்க விரும்பவில்லை” என்றார்.

"Only a great actor can overact" மிகச்சிறந்த நடிகரால்தான் மிகையாக நடிக்க முடியும். நான் சிறந்த நடிகன் அல்ல என துல்கரிடம் இந்த வாக்கியத்தைச் சொல்லியிருக்கிறார். மம்மூட்டி போன்றவரே அப்படிச் சொன்னால் நம்மை எந்த தராசில் வைப்பது என துல்கருக்கு தோன்றியிருக்கலாம். நம்முடைய தந்தையின் சாதனைகளையும் எல்லைகளையும் உடைத்து முன்னேறுவது என்பது சவாலானது. எப்போதும் அது அடையாளமாகவும் தடையாகவும் இருக்கும் என்பதால் வாரிசுகள் கலைத்துறையில் பெரும்பாலும் ஏமாற்றங்களையே சந்திக்கின்றனர். என்ன இருந்தாலும் உங்கப்பா போல் நடிக்கத் தெரியவில்லை; ஆடத் தெரியவில்லை; பாடத் தெரியவில்லை என்கிற முத்திரை சாதாரணமாக விழுந்துவிடும். அதன்பின், அத்துறையில் ஏறி நிற்பது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியமாகிவிடும்.

துல்கர் சல்மான் அந்த அடையாளத் தடைகளை மீற தன்னை மற்ற மொழி சினிமாக்களிலும் விரிவாக்கிக் கொண்டதன் வழியாக அதனை வெல்ல முயன்றுகொண்டிருக்கிறார் எனத் தோன்றுகிறது. மலையாளத்தில் இருக்கும் வரை துல்கர் என்ன செய்தாலும் மம்மூட்டி மாதிரி இல்லை என்கிற விமர்சனங்களைச் சந்தித்தே தீர வேண்டும் என்பதை அறிந்து, தெலுங்கிலும் தமிழிலும் தனக்கான கதைகளையும் ரசிகர்களையும் தேடிக்கொண்டார். விளைவு, துல்கர் இருந்தால் அப்படம் சோடை போகாது என்கிற நம்பிக்கைகளை ரசிகர்களிடம் உருவாக்கி இன்றைய ரசிகர்களிடம் ஸ்கிரிப்ட் அறிவு கொண்ட நடிகராக இருக்கிறார்.

கடந்த கால திரைப்படங்களை ஒப்பிட்டால் மம்மூட்டி - துல்கர் சல்மான் விஷயத்தில் இருவரும் ஆழமாக ஒருவரை ஒருவர் இழக்காமல் அவரவர் பாதையில் நற்பெயருடனே படைப்புகளில் இருந்துகொண்டிருக்கின்றனர். சீதா ராமம் போன்ற வெற்றியின் மூலம் பான் இந்திய அடையாளத்தை வேறு ஒரு நடிகர் பெற்றிருந்தால் இந்நேரம் அவர்கள் தேர்ந்தெடுக்கிற கதைகளே வேறொன்றாக மாறியிருக்கும். ஆனால், துல்கர் அடுத்ததாக சுப் (chup) என்கிற திரை விமர்சனங்களால் பாதிக்கப்பட்ட, உளவியல் சிக்கல் கொண்ட இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்தார். நம் வணிகங்கள் மாறிக்கொண்டே இருப்பவை; ஆனால், நம்முடைய கதைத் தேர்வுகள்தான் உண்மையில் நம்மை யாரென வரையறை செய்பவை என்பதை வாய்ப்புகள் அமையும் போதெல்லாம் மம்மூட்டியும் துல்கரும் வெளிப்படுத்தி தங்களைக் கதைகளின் காதலர்களாக முன்னிருத்திக் கொள்கின்றனர்.

ஓ.ம் திரைப்படத்தைக் கண்ட பலரும் மம்மூட்டி எப்படி ஒப்புக்கொண்டார் அதிர்ச்சியடைந்திருக்கலாம். சொன்னதை எடுக்கவில்லையோ என்னமோ... மேடையிலேயே இதனைக் குறிப்பிடும் விதமாக, இதெல்லாம் ஒரு கதாபாத்திரமா என மம்மூட்டி வெளிப்படையாகவே தன் எண்ணத்தைச் சொல்லிவிட்டார். அவர் தான் நடித்த திரைப்படங்கள் குறித்து இப்படி பேசுபவரும் இல்லை. ஆனால், அப்படியொரு கதாபாத்திரத்திற்கு நம் நாள்களை வீணடித்துவிட்டோமே என தோன்றியிருக்கலாம்.

ஆகாசம்லோ ஒக்க தாரா திரைப்படத்தின் கதை நாயகியை மையமிட்டே எழுதப்பட்டது. அவருக்கு உதவும் கணவனாக துல்கர் நடித்திருந்தார். யார் வேண்டுமானாலும் அதனைச் செய்யலாம். ஆனால், ஒரு நல்ல கதை. நமக்கும் ஒரு பெயர் இருக்குமென தைரியமாகச் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்.

நடிகர் மம்மூட்டி ஏகப்பட்ட வெற்றிகளைக் கொடுத்துவிட்டார். தன் அபார நடிப்பால் இந்திய சினிமாவில் நீங்காத இடம் ஒன்றும் அவருக்கு உண்டு. தன்னுடைய ஆர்வம் நடிப்பில் மட்டும்தான் என இயக்குநர் பக்கமோ வேறு வேலைகளிலோ ஈடுபடவில்லை. முழுமையான நடிகனாக வெளிப்பட்டுக் கொண்டே இருப்பது; மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அதிகம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுப்பது என அவரால் ஜென் ஸி ரசிகர்களிடமும் ஒரு அதிர்வைக் கொடுக்க முடிகிறது. ஓ.மில் அதிக காட்சிகள் இல்லையென்றாலும் மம்மூட்டியின் நடனக் காட்சிக்கு கேரளத்தில் அப்படி ஒரு வரவேற்பு!

மம்மூக்காவை மீண்டும் கமர்சியல் திரைப்படத்தில் காண வேண்டுமென அவரின் ரசிகர்கள் ஏங்குவது தெரிகிறது. ஆனால், அதைச் செய்ய நிறைய பேர் இருக்கிறார்களே? நம்மைப் போல் செய்யத்தான் ஆள்கள் குறைவு என இன்னும் ரூ. 100 கோடி கூட மம்மூட்டி வசூலிக்கவில்லை என்கிற விமர்சனங்களையெல்லாம் இடது கையால் தட்டிவிட்டு நல்ல கதையா? வாங்க, என வலது கையால் இயக்குநர்களின் கைகளைப் பிடித்து குலுக்குகிறார்.

அந்த சுவாரஸ்யமான கதை தேர்வுகள் துல்கர் சல்மானையும் வசீகரித்திருக்கிறது. ஒரு வட்டத்திற்குள் துல்கரையும் அடக்கி வைக்க முடியாது. மலையாளத்திற்கு இணையான வணிகத்தை மற்ற மொழிகளிலும் துல்கர் உருவாக்கி வைத்திருக்கிறார். மாஸ் மசாலா, வன்முறைத் திரைப்படங்களில் ஒரு கூட்டமே சிக்கியிருக்கிறது. அந்த அதிரடி வன்முறைக் காட்சிகள் இல்லையென்றால் நம் வணிகம் காணாமல் போகும் என்கிற பதற்றங்களும் இருப்பதால்தான் பல முன்னணி நடிகர்கள் கதைப்பக்கம் திரும்புவதே இல்லை.

துல்கர் சல்மானுக்குத் தன்னால் வாப்பிச்சி (மம்மூட்டியைச் செல்லமாக அழைக்கும் பெயர், மம்மூட்டி துல்கரைச் செல்லமாக சாலு என்கிறார்) போல் ஆக முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிந்திருக்கலாம். அதேநேரம், நம் காலத்திற்கு அடுத்த துல்கர் ஆக ஆசைப்படும் கூட்டத்தை உருவாக்கலாம் என கதைகளைத் தேர்ந்தெடுத்து தன்னைத் தேர்ச்சியாளனாக மாற்றிக்கொண்டே இருக்கும் விழைவுகளையும் கவனிக்க வேண்டும்.

இந்த கதைத் தாகம் இருப்பதால்தான் மிக கமர்சியலாக பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் இருந்தும் ஓரளவுக்கு மேல் கதையைப் பாதிக்கிற கமர்சியல்தனம் வேண்டாம் என விலகியிருக்கின்றனர். மம்மூட்டியின் கதைத் தேர்வுகள் குறித்து துல்கர் சல்மானுக்கு நிறைய ஆச்சரியங்கள் இருக்கின்றன. நேரடியாக பாராட்டவில்லை என்றாலும் மம்மூட்டியும் தன் மகனின் கதைத் தேர்வுகளைப் பிறரிடம் சிலாகித்து பேசியிருக்கிறார்.

இருவரையும் நல்ல கதைகளே இயக்குகின்றன. அதனால்தான் மம்மூட்டி, “மற்ற தயாரிப்பாளர்கள் எடுக்கத் தயங்கக்கூடிய வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்” என்றும் துல்கர் சல்மான், ”நல்ல எழுத்து, பலவீனமான இயக்கத்தையும் நடிப்பையும் தாண்டி படத்தைக் காப்பாற்ற முடியும் என்பது தனது நம்பிக்கை” என்றும் கூறுகின்றனர்.

ஓ.ம் மற்றும் ஆகாஷம்லோ ஒக தாரா ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியானது. இப்படங்கள் இவர்களை மட்டும் நம்பி இல்லை. ஆனால், இந்த இருவரால்தான் கூடுதல் தனித்துவத்தைப் பெற்றன. அந்த எண்ணங்களை மம்மூட்டியும் துல்கரும் தங்களின் கதைகளின் வழியாகவே உருவாக்கினர்.

பெண்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நாம் யார்? துல்கர் சல்மான் பேச்சு!

The stories chosen by actors Mammootty and Dulquer Salmaan are garnering special attention from fans.