இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தனி ஆளாக போராடிய துருவ் ஜுரல்:
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாக, படிக்கல் 21 ரன்களுக்கு அவுட்டானார். சுப்மன்கில், ரிஷப் பண்ட் அடுத்தடுத்து அவுட்டாக இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்திருந்தது.
240 ரன்கள் பின்தங்கிய நிலையில், இன்றைய ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு துருவ் ஜுரல் நமபிக்கை அளிக்கும் விதமாக ஆடினார். ஆனால் அவருக்கு பக்கபலமாக யாரும் ஆடவில்லை. அன்சுல் கம்போஜ் வந்த வேகத்திலே டக் அவுட்டாக அடுத்து வந்த ஆகாஷ் தீப் நிதானமாக ஆடினார். அவர் ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விளாச துருவ் ஜுரல் இந்திய அணியை மீட்கும் பொறுப்பை ஏற்று தனி ஆளாக போராடினார்.
ஒத்துழைத்த ஆகாஷ் தீப், ப்ரார்:
சிறப்பாக ஆடிய துருவ் ஜுரல் அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார். மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு தந்த ஆகாஷ் தீப் 52 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த குர்னூர் ப்ரார் களத்தில் நன்றாக ஜுரலுக்கு ஒத்துழைபபு அளித்தார்.
மறுமுனையில் துருவ் ஜுரல் பவுண்டரிகளாக விளாச இந்திய அணி 200 ரன்களை கடந்தது. சிறப்பாக ஒத்துழைப்பு அளித்த குர்னூர் ப்ரார் 40 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து அவுட்டாக துருவ் ஜுரல் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். அவர் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 170 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 88 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக அவுட்டானார்.
நெருக்கடியில் இந்தியா:
இந்திய அணி இறுதியில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 110 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. இந்த மைதானத்தைப் பொறுத்தமட்டில் இந்திய அணி இதற்கு முன்பு ஒரே ஒரு போட்டி நியூசிலாந்துடன் ஆடி தோல்வி அடைந்துள்ளது.
இந்திய அணி தற்போது இந்த டெஸ்ட் போட்டியில் நெருக்கடியான சூழலில் உள்ளது. நியூசிலாந்து அணி 250 முதல் 300 ரன்கள் வரை இலக்கை நிர்ணயிக்க திட்டமிட்டு ஆடும் என்று கருதப்படுகிறது. போட்டி முடிய இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், நியூசிலாந்து அதிரடியாக ஆடி இலக்கை நிர்ணயிக்க முடிவு செய்யும் என்று கருதப்படுகிறது.
காப்பாற்றுவார்களா பந்துவீச்சாளர்கள்?
இந்திய பந்துவீச்சாளர்கள் அவர்கள் சவாலான இலக்கை நிர்ணயிக்க விடாமல் தடுக்க முனைப்புடன் பந்துவீசி வருகின்றனர். பும்ரா, ஆகாஷ் தீப், கம்போஜ், குர்னூர் ப்ரார் சிறப்பாக பந்துவீச வேண்டியது கட்டாயம் ஆகும்.

