அணுசக்தி துறையில் இந்தியாவிற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியவர், 5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர், இந்திய அணுசக்தி ஆணையம் உருவாகக்காரணமாக இருந்த ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அப்படி என்ன செய்துவிட்டார் ஹோமி பாபா? இவரின் சாதனை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
யார் இந்த ஹோமி பாபா?
1909-ஆம் ஆண்டு அக்டோபர்-30 ஆம் தேதி அப்போதைய பம்பாய் மாகாணத்தில் வசதி மிக்க பார்சி குடும்பத்தில் ஹோமி ஜஹாங்கீர் பாபா பிறந்தார். பள்ளிக்கல்வியை பம்பயிலேயே நிறைவுசெய்த பாபா, உயர்கல்விக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கோன்வில் மற்றும் கயஸ் கல்லூரியில் பயின்று இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார். இதனையடுத்து கோட்பாட்டு இயற்பியலால் ஈர்க்கப்பட்ட அவர், ரோமில் உள்ள இயற்பியல் நிறுவனத்தில் இயற்பியலாளர் என்ரிகோ ஃபெர்மியுடன் பணிபுரிந்தார். இதனையடுத்து 1935-ஆம் ஆண்டில் 'விண்வெளிக் கதிர்வீச்சு மற்றும் பாசிட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களின் உருவாக்கம் மற்றும் அழிவு' என்ற தலைப்பில் ஆய்வறிக்கைக்காக ஹோமி பாபா அணு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
தாய்நாட்டிற்கு சேவை செய்யத்தொடங்கிய பாபா!
1939-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கிய பின்னர் இந்தியாவிலேயே தங்கிய ஹோமிபாபா, 1940-ஆண்டு இயற்பியலாளர் சி.வி.ராமனின் அழைப்பின் பேரில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். அப்பணியின்போதே காஸ்மிக் கதிர்கள் மற்றும் அடிப்படை துகள்கள் குறித்த ஆராய்சியை மேற்கொண்ட ஹோமிபாபா, லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்வானதோடு பிரிட்டன் நாட்டிலிருந்து ஆடம்ஸ் பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பிரதமருடன் நெருக்கம்: அணுசக்தி வளர்ச்சிக்கு முன்னோடி!
அணுசக்தியின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருந்த ஹோமி பாபா இந்தியாவில் அதற்கான முறையான முன்னெடுப்பும், போதிய நிதியுதவியும் இல்லாததை கண்டு வேதனையுற்றார். இதனையடுத்து தொழிலதிபர் ஜே.ஆர்.டி டாடாவிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் 1945-ல் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) நிறுவப்பட்டு அதன் முதல் இயக்குநராகப் பாபா பொறுப்பேற்றார்.இந்நிறுவனம் செய்முறை இயற்பியல், அணு வேதியியல் மற்றும் உலோகவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.இதனையடுத்து ஹோமிபாபாவின் திறமை நாடு முழுவதும் அறியப்பட்ட நிலையில், அவரது வேண்டுகோள் மற்றும் ஆலோசனையின் பேரில் இந்திய அணுசக்தி ஆணையத்தை இந்திய அரசு அமைத்து, அதன் தலைவராக பாபாவையே நியமித்தது.
நாட்டின் முதல் அணு உலை உருவாக்கம்
1954-இல் அணுசக்தித் துறை நிறுவப்பட்டு அதன் செயலாளராக பாபா நியமிக்கப்பட்டு பணியாற்றினார். இக்காலக்கட்டத்தில்தான் டிராம்பேயில் ஒரு புதிய அணுசக்தி ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு நாட்டின் முதல் அணு உலையான அப்சரா நிறுவப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கனடாவின் உதவியுடன் கனடா - இந்தியா ரியாக்டர் யூட்டிலிட்டி சர்வீசஸ் (CIRUS) எனும் கனநீர் அணு உலையையும் இந்தியா அமைத்தது. பிற நாடுகள் அணுஉலைகளுக்கு யுரேனியத்தை பயன்படுத்திய நிலையில், பாபா அதனை புறந்தள்ளி நாட்டில் அதிகமாக கிடைத்தோரியத்தை பயன்படுத்தி வெற்றிகண்டார். 1955 ஆண்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற அணுசக்தியின் அமைதியான பயன்பாடுகள் குறித்த ஐ.நா மாநாட்டின் தலைவராகவும் பாபா பணியாற்றினார். ஹோமிபாபாவின் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சியின் விளைவாக 1964-இல் இந்தியாவின் முதல் ஆயுதத் தர புளூட்டோனியம் உற்பத்தி செய்யப்பட்டது.
ஹோமிபாபா மரணம்: இந்தியாவின் பேரிழப்பு!
1966-ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று, சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹோமிபாபா பயணித்த ஏர் இந்தியா விமானம் ஜெனிவா அருகே விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். பாபாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படும் நிலையில்,அவர் இறக்காமல் இருந்திருந்தால் 1974-இல் நடைபெற்ற இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனை அதற்கு முன்பாகவே நடத்தப்பட்டிருக்கும் எனவும், அணுசக்தித்துறையில் உலக நாடுகளுக்கு சவால் விடும் நாடாக இந்தியா திகழ்ந்திருக்கும் என்பதும் அறிவியல் அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

