சென்னை,
சென்னை சேத்துப்பட்டு, மனோகரன் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 52). இவர் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. சமீபத்தில் தனது மூத்த மகளின் கணவரான உதயகுமார் (41) என்பவரோடு, வீட்டில் உட்கார்ந்து செல்வம் மது அருந்தியதாக தெரிகிறது.
சிகிச்சை
அப்போது அவர், வீட்டிற்குள் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது மருமகன் உதயகுமார் போதை தெளிந்து திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டிற்கு போய்விட்டார். மயங்கி கிடந்த செல்வம், தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
சேத்துப்பட்டு போலீசார் இதுதொடர்பாக மர்ம சாவு சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். செல்வத்தின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில், அவரது நெஞ்சு எலும்பில் முறிவு ஏற்பட்டு பலத்த காயம் இருப்பதாகவும், அதனால்தான் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
விசாரணை
இதனால் சேத்துப்பட்டு போலீசார் இதுதொடர்பான வழக்கை, கொலை வழக்காக மாற்றி மருமகன் உதயகுமாரை கைது செய்தனர். அவர் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் விசாரணையில், உதயகுமார் தனது மாமனாரின் சாவில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், அவர் போதையில் வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், தான் அவரை தாக்குதல் எதுவும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

