ஈரோடு.
பயிர் விளைச்சல் போட்டியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் அருள்வடிவு தெரிவித்துள்ளார்.
பயிர் விளைச்சல் போட்டி
ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அருள்வடிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழ்நாட்டில் மாநில மற்றும் மாவட்ட அளவில் அனைத்து பயிர்களிலும் உற்பத்தி திறனை பெருக்கும் வகையில், அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளன. மாநில அளவிலான சிறு, குறு விவசாயிகளுக்கான மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள் விருது போட்டி துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், சாமை ஆகிய பயிர்களுக்கு நடத்தப் படுகிறது. தமிழ்நாடு அளவில் பயிர் வாரியாக அதிக மகசூல் பெற்று முதலிடம் பெறும் விவசா யிக்கு ரூ.2 லட்சம், 2-வது இடம் பெறும் விவசாயிக்கு ரூ.12 லட்சம், 3-வது இடம் பெறும் விவசாயிக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் போட்டிகள் நிலக்கடலை, நெல் ஆகிய பயிர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்படுகின்றன. மாவட்ட அளவில் முதலிடம் பெறும் விவசாயிக்கு ரூ.50 ஆயிரம், 2-வது இடம் பெறும் விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.
ரூ.5 லட்சம்
மாநில அளவிலான சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது போட்டி, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்காக நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் விவசாயிக்கு சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதுடன் சிறப்பு பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். தொடர்ந்து 3 ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி முறையில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சன்ன ரக நெல் வகைகளை சாகுபடி செய்திருக்க வேண்டும். இந்த போட்டிகளில் பங்கேற்கும் விவசாயிகள் குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பில் பயிர் சாகுபடி செய்திருக்க வேண்டும்.
சிறுதானிய பயிர்களுக்கு குறைந்தபட்சம் 1 ஏக்கர் பரப்பில் பயிர் சாகுபடி செய்திருக்க வேண்டும். குத்தகைதாரர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள். போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் விவசாயிகள் உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவு கட்டணமாக ரூ.150 தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
செலுத்தப்பட்ட பதிவு கட்டணம் திரும்ப வழங்கப்படமாட்டாது. விண்ணப்பத்துடன் பயிரிடப்பட்டுள்ள பரப்புக்கான சான்று ஆவணங்களாக பதிவு கட்டணம் செலுத்திய ரசீது, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, நில வரைபடம், வங்கி கணக்கு எண் அட்டை, விவசாயி அடையாள எண் மற்றும் மின்னணு பயிர்க்கணக்கீடு சான்று ஆகியவற்றின் நகல்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

