சென்னை,
நடிகர் அருண் விஜய் இன்று தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவர் நடித்து வரும் ‘இருளன்’ திரைப்படத்தின் படக்குழு சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
முத்தையா இயக்கத்தில் அருண் விஜய்
1995-ம் ஆண்டு வெளியான ‘முறை மாப்பிள்ளை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர், கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதன்பிறகு ‘தடம்’, ‘குற்றம் 23’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘மாபியா’, ‘வணங்கான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘ரெட்ட தல’ திரைப்படம் வெளியானது. அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்டர்’ திரைப்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.
தற்போது ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் புதிய படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘இருளன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் போஸ்டரில், “இது போர்குடி காவல் இனத்தின் வீர வரலாறு” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
கதாநாயகியாக மிர்ணா மேனன்
‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த மிர்ணா மேனன், இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
பிறந்தநாள் போஸ்டர் வெளியீடு
இந்த நிலையில், இன்று தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அருண் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ‘இருளன்’ படக்குழு சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. அத்துடன், படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘இருளன்’ திரைப்படம் வரும் தை மாதத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அருண் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

