வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கடந்த மாதம் 23-ந்தேதி இரவு பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் அடர்லி குன்னூர் ரெயில் நிலையங்களிடையே 72 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

மலை ரெயில் ரத்து

மண் சரிவு காரணமாக ரெயில் பாதையில் பெரிய மற்றும் சிறிய பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. மண் சரிந்து ரெயில் பாதையை மூடியது. மரங்கள் வேரோடு சாய்ந்து பாதையின் குறுக்கே விழுந்தன. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் சேவை கடந்த மாதம் 24-ந்தேதி முதல் நேற்று (18-ந்தேதி) வரை 26 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.

சீரமைக்கும் பணி

ரெயில்வே துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் குன்னூர் மலை ரெயில் தண்டவாளப் பாதை பிரிவு பொறியாளர் குமார் மேற்பார்வையில் 30-க்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரெயில் பாதை சீரமைப்பு

ரெயில் பாதையை சீரமைப்பதற்காக பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ரெயில் பாதையில் விழுந்து கிடந்த பாறாங்கற்கள் வெடி வைத்து தகர்த்து அகற்றப்பட்டன. மண் சரிவால் சேதமடைந்த ரெயில் தண்டவாளங்கள் மற்றும் பல் சக்கரம் பொருத்தப்பட்ட பினியன் பார்கள் அகற்றப்பட்டு புதிய தண்டவாளம் மற்றும் ராக்பார்கள் பொருத்தப்பட்டன.

மீண்டும் தொடக்கம்

ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் நேற்று மாலை முடிவடைந்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை 26 நாட்களுக்கு பின்னர் இன்று (19-ந்தேதி) முதல் மீண்டும் தொடங்கியது.

சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 7.10 மணிக்கு வழக்கம்போல் மலை ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த மலை ரெயிலில் 200 சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்த வண்ணம் பயணம் செய்தனர்.