திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கச்சேரி சாலை பகுதியைச் சேர்ந்த கோபிநாத்(33). இவரது 3 வயது மகன் ஷர்வின், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீகேஜி படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது உடலில் காயங்கள் இருந்தன.

இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது, பள்ளியில் ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் தன்னை தாக்கியதாக சிறுவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பள்ளிக்குச் சென்று விசாரித்த சிறுவனின் தந்தை கோபிநாத், வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்வையிட்டுள்ளார்.

அப்போது, சிறுவனின் இரு கைகளும் கயிற்றால் கட்டப்பட்டுள்ளது போன்று காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், சிறுவனை தாக்கியதாக ஆசிரியை பாக்கியலட்சுமி மற்றும் பெண் உதவியாளர் செல்வி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, பள்ளியில் 3 வயது சிறுவன் கைகள் கட்டப்பட்டு தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சியில் மாயமான சிறுமியின் பெற்றோரிடம் மீண்டும் விசாரணை: ஒரு மாதமாக தேடுதல்