கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு-
தற்கொலை
கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள சின்னகாளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 63). இவருக்கு சொந்தமான விவசாய கிணறு அப்பகு தியில் உள்ளது.
உடல்கள் மீட்பு
நேற்று மாலை இந்த கிணற்றில் 5 பேர் பிணமாக மிதந்தனர். இதை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுபற்றிய தகவல் காட்டுத் தீ போல் பரவியது. அங்கு ஏராளமானோர் திரண்டனர். இதுபற்றி உடனடியாக வாங்கல் போலீசாருக்கும். தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் பிணமாக கிடந்த 5 பேரின் உடல்களை மீட்டனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
கிணற்றில் பிணமாக கிடந்தவர்கள் ராமசாமி, அவரது மனைவி ஜானகி (60), இவர்களது மகள் சுகுணா (35), சுகுணாவின் மகள் சிவானி (10), மகன் ஆதிரன் (4) என தெரியவந்தது. பின்னர் அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவருடன் தகராறு
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக ராமசாமி தனது குடும்பத்துடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது ராமசாமியின் மகள் சுகுணாவின் கணவர் பிரபு கார் மலர் நிறுவனம் நடத்தி வருகிறார். சுகுணாவுக்கும், பிரபுவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சுகுணா தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் குதித்து தற்கொலை
கிணற்றில் பிணமாக கிடந்த ராமசாமி, அவரது மனைவி ஜானகி, மகள் சுகுணா, பேத்தி சிவானி, பேரன் ஆதிரன் ஆகிய 5 பேரும் சேலையால் உடல்களையும், கைகளையும் கட்டியிருந்தனர். இதில் ராமசாமி தனது பேத்தியான சிவானியை தனது நெஞ்சுடன் சேர்த்தும், சுகுணா தனது மகனான ஆதிரனை நெஞ்சுடன் சேர்த்தும் சுட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
சோகம்
5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அறிந்த உறவினர்கள், கிராம மக்கள் அவர்களின் உடல்களை கண்டு கதறி அழுதனர். இது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது. தற்கொலை செய்து கொண்ட ராமசாமி டைல்ஸ் வியாபாரம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

