சென்னை மாதவரம் அருகே மத்திய வருவாய் புலனாய்வுத்துறை நடத்திய சோதனையில் ரூ.140 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளி மாநிலத்திலிருந்து விலை உயர்ந்த போதைப் பொருள் தமிழக எல்லை வழியாக கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தமிழ்நாடு எல்லை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் பகுதிகளில் அதிகாரிகள் ரகசிய வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

போதை பொருள் பறிமுதல்

இந்நிலையில் ஆந்திரா வழியாக வந்த கடத்தல் குழு செங்குன்றம் பகுதியில் வாகன சோதனையின் போது தப்பித்த கடத்தல் வாகனம்(கார்) மாதவரம் ரவுண்டானா பகுதியில் அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர். அதில் சோதனை செய்து பார்த்தபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த ஹெராயின் போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து போதை பொருளை கடத்தி வந்த இருவரை கைது செய்துள்ளனர்.

கடத்திவரப்பட்ட ஹெராயின் போதை பொருள் தரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ 2 கோடி முதல் 7 கோடி வரையில் இருக்கும் என தகவல் உள்ள நிலையில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ போதை பொருள் 150 முதல் 300 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

போதை பொருள் கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடதலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விலை உயர்ந்த இந்த போதைப் பொருளை எந்த மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வந்தனர் என்ற கோணத்திலும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.