ஐக்யூ நிறுவனம் 33W மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் திறன்களுடன் கூடிய புதிய 20,000mAh பவர் பேங்கை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 3 சாதனங்களைச் சார்ஜ் செய்யும் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஐக்யூ நிறுவனம் தனது புதிய 20,000mAh பவர் பேங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 33W மற்றும் 66W என இரண்டு விதமான சார்ஜிங் வேக மாடல்களில் கிடைக்கிறது. தற்போது சீனாவில் அறிமுகமாகியுள்ள இந்த பவர் பேங்கின் 33W மாடல் ரூ.2,300 விலையிலும், 66W மாடல் அறிமுக சலுகையாக ரூ.2,800 விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

2 மாடல்களுமே மஞ்சள் நிறத்தில் PC மற்றும் ABS பிளாஸ்டிக் உடற்பகுதியைக் கொண்டுள்ளன. இதன் பரிமாணங்கள் 123 x 71 x 30 மிமீ ஆகும். இதன் மிக முக்கியமான சிறப்பம்சமே, இதில் இணைக்கப்பட்டுள்ள தட்டையான இன்-பில்ட் USB-C கேபிள் தான். பக்கவாட்டில் மடிந்து நிற்கும் இந்த 'பிரைடெட்' (Braided) கேபிளை, பவர் பேங்கை கையில் பிடித்துச் செல்வதற்கான ஸ்ட்ராப் (Strap) ஆகவும் பயன்படுத்த முடியும். இந்த கேபிள் 10,000 முறை வளைத்தாலும் சேதமடையாது என ஐக்யூசோதித்து உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த இன்-பில்ட் கேபிளுடன் சேர்த்து, கூடுதல் USB-A போர்ட் மற்றும் மற்றொரு USB-C போர்ட்டும் இதில் உள்ளது. ஒரே நேரத்தில் 3 சாதனங்களை இதில் சார்ஜ் செய்யலாம். இருப்பினும், 3 சாதனங்களை ஒரே நேரத்தில் இணைக்கும்போது மொத்த அவுட்புட் திறன் 15W ஆகக் குறையும். மேலும், வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்ற சிறிய சாதனங்களை பாதுகாப்பாக சார்ஜ் செய்ய ‘லோ-கரண்ட் மோட்’ வசதியும் உள்ளது. இணக்கமான USB-C சாதனங்களில் இது தானாகவே இயங்கும்; USB-A போர்ட்டைப் பயன்படுத்தும்போது பவர் பட்டனை இருமுறை அழுத்தி இதை மேனுவலாக இயக்கலாம்.

வழக்கமான எல்.இ.டி (LED) புள்ளிகளுக்குப் பதிலாக, ஐக்யூ இதில் ஒரு சிறிய கலர் டிஸ்ப்ளேவை (Color Display) அமைத்துள்ளது. இந்தத் திரையானது பவர் பேங்கின் துல்லியமான பேட்டரி சதவீதம் மற்றும் ரீசார்ஜ் ஆகும் நிலையை நேரடியாகக் காட்டும். அதுமட்டுமின்றி, சாதனத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் அதற்கான 'எர்ரர் கோடுகளை' (Error Codes) காட்டும் டயக்னாஸ்டிக் கருவியாகவும் இது செயல்படுகிறது:

H1 - பவர் பேங்க் அதிக வெப்பமடைவதைக் குறிக்கும் (Overheating). H2 - அதிக மின்னழுத்தத்தைக் குறிக்கும் (Overvoltage). H0 - தீவிர பாதுகாப்பு கோளாறு காரணமாக பவர் பேங்க் நிரந்தரமாகச் செயலிழந்ததைக் குறிக்கும்.

இதன் உள்ளே 2 10,000mAh லித்தியம்-அயன் பாலிமர் செல்கள் உள்ளன. இதன் மொத்த திறன் 74Wh என்பதால், பெரும்பாலான விமான நிறுவனங்கள் அனுமதிக்கும் 100Wh வரம்பிற்குள் இது அடங்குகிறது. இதனால் இதை விமானப் பயணங்களின் போதும் தாராளமாகக் கொண்டு செல்லலாம். 300 முறை முழுமையாக சார்ஜ் செய்த பிறகும், இதன் பேட்டரி தனது 80% திறனைத் தக்கவைத்துக்கொள்ளும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 2 மாடல்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு அவற்றின் சார்ஜிங் வேகம் தான்.

33W மாடல் - PD 3.0, PPS மற்றும் QC 2.0 போன்ற வழக்கமான சார்ஜிங் புரோட்டோகால்களை ஆதரிக்கிறது. 66W மாடல் - AVS உடன் கூடிய PD 3.2 தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. மேலும், இது 45W வரையிலான ‘இன்புட் பவரை’ஏற்கும் என்பதால், பவர் பேங்கை மிக வேகமாகக் ரீசார்ஜ் செய்ய முடியும்.

ஐக்யூவின் சோதனை முடிவுகளின்படி, இந்த 66W மாடல் வெறும் 30 நிமிடங்களில் ஐபோன் 18 புரோவை (iPhone 18 Pro) 73% வரையிலும், மேக்புக் நியோவை (MacBook Neo) 33% வரையிலும் சார்ஜ் செய்யக்கூடியது. 2 பதிப்புகளுமே 2026 GB 47372-2026 பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டவை; 3C சான்றிதழ் பெற்றவை மற்றும் 19 வகையான மின்சாரப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை.