How To Get Natural Sleep Without Phone: இரவு தூங்கும் முன் மொபைல் பார்ப்பதை நிறுத்தினால் உடலில் என்ன அற்புத மாற்றங்கள் நிகழும் தெரியுமா? இயற்கையான தூக்கம், மன அழுத்தம் குறைவு என பல நன்மைகள் கிடைக்கும். இது குறித்து விரிவாக பார்ப்போம்.
இன்றைய வேகமான உலகில், நாம் அனைத்திற்கும் ஸ்மார்ட்போனைத்தான் நம்பி இருக்கிறோம். காலையில் கண் விழித்து அலாரம் ஆஃப் செய்வது முதல், இரவில் தூங்கும் வரை மொபைல் நமது கையிலேயேதான் இருக்கிறது. குறிப்பாக படுக்கையறை விளக்கை அணைத்துவிட்டு, போர்வையில் சுருண்டு படுத்துக்கொண்டு 'ரீல்ஸ்' பார்ப்பதும், சாட் செய்வதும் நமக்குத் தெரியாமலேயே ஒரு பெரிய பழக்கமாக மாறிவிட்டது. ஆனால், இந்தத் தீய பழக்கம் நமது உடலுக்குள் இருக்கும் ஹார்மோன் சமநிலையை எவ்வாறு கெடுக்கிறது என்பது நமக்குத் தெரிவதில்லை.
மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, இரவில் தூங்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்பு உங்கள் மொபைல் போனை ஓரமாக வைத்துவிட்டால், உங்கள் உடலில் மூன்று அற்புதமான மாற்றங்கள் நடக்கும். அந்த மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்த முழுமையான தகவலை பார்க்கலாம்.
நமது மூளையில் இருக்கும் 'பீனியல் சுரப்பி' இருட்டாகும் போது 'மெலடோனின்' என்னும் ஹார்மோனைச் சுரக்கும். இது நமக்கு ஆழமான, நிம்மதியான தூக்கம் வர உதவி செய்யும். ஆனால் நாம் திரையைப் பார்க்கும்போது அதில் இருந்து வரும் 'நீல ஒளி' (Blue Light), இன்னும் பகலாகவே இருக்கிறது என்று மூளைக்குத் தவறான செய்தியை அனுப்புகிறது. இதனால் மெலடோனின் உற்பத்தி 50 சதவீதம் வரை குறைகிறது. நீங்கள் போனை ஓரமாக வைத்துவிட்டால், இந்த ஹார்மோன் சரியாகச் சுரந்து, எந்த மாத்திரையும் இல்லாமல் இயற்கையாகவே நீங்கள் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றுவிடுவீர்கள்.
ஸ்ட்ரெஸ் இல்லாத மனம்
'கார்டிசோல்' என்பதை மன அழுத்த ஹார்மோன் என்று கூறுவார்கள். இரவில் தூங்கும் நேரத்தில் சமூக வலைதளங்களில் மற்றவர்களின் வாழ்க்கையைப் பார்த்துப் பொறாமைப்படுவது, எதிர்மறையான செய்திகளைப் படிப்பது அல்லது குற்றப் பின்னணிக் கதைகளை பார்ப்பது இந்த ஹார்மோனின் அளவை அதிகரிக்கும். இது இதயத் துடிப்பை அதிகரித்து, மூளையை எப்போது விழிப்பாகவே வைத்திருக்கும். போன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால், கார்டிசோல் அளவு குறைந்து உங்கள் மனம் அமைதியாகிவிடும். காலையில் எழும் போது நீங்கள் புதிய ஆற்றலுடன் இருப்பீர்கள்.
நமது பசியைக் கட்டுப்படுத்தும் இரண்டு ஹார்மோன்கள் 'லெப்டின்' மற்றும் 'க்ரெலின்' ஆகும். நாம் போனை நோண்டிக்கொண்டே தூக்கத்தைக் கெடுத்தால், இந்த ஹார்மோன்களின் சமநிலை தப்பியோடிவிடும். அதனால்தான் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுகிறத. தூங்குவதற்கு முன்பு போனை தூரமாக வைத்துவிட்டுச் சரியாகத் தூங்கினால், இந்த ஹார்மோன்கள் சமநிலைக்கு வந்துவிடும். இது தேவையில்லாமல் உடல் எடை ஏறுவதைத் தடுத்து, உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
நீங்கள் நன்றாகத் தூங்கும் போது உடலில் 'ஹியூமன் குரோத் ஹார்மோன்' நன்றாகச் சுரக்கும். இது உங்கள் சரும செல்களைப் புதுப்பித்து, முகத்தில் சுருக்கம் வராமல் தடுக்கும். அதாவது, எந்த அழகு சாதனப் பொருட்களும் இல்லாமல் இயற்கையாகவே பளபளப்பான சருமம் கிடைக்க, இரவில் தூங்குவதற்கு முன்பு மொபைலைத் தூரமாக வைப்பதுதான் சிறந்த மருந்து.
மொத்தத்தில், இன்றிலிருந்தே ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். இரவு 9 அல்லது 10 மணிக்கு மேல் போனுக்கு 'குட்பை' சொல்லிவிட்டு, புத்தகம் படிக்கும் அல்லது உங்களுக்குப் பிடித்தவர்களிடம் பேசும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை உங்களுக்கே சொந்தம்.

