இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வரும் அதேசமயம், ஹாங்காங்கில் ஹாங்காக் சிக்ஸஸ் என்ற கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்று ஆடி வருகிறது. 

6 ஓவர் போட்டி:

6 ஓவர் கொண்ட இந்த போட்டியைப் பொறுத்தமட்டில் 6 வீரர்கள் மட்டுமே பங்கேற்று ஆடுவார்கள். இதில் இன்று நடந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியது. ஹாங்காங்கின் மாங்காக் நகரில் நடந்த இந்த போட்டியில் குருணல் பாண்ட்யா தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஷஷாங்க் சிங், ராகுல் திவேதியா, நடராஜன் களமிறங்கினர்.

89 ரன்கள் டார்கெட்:

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ராகுல் திரிபாதி 9 ரன்னில் அவுட்டாக, நிதிஷ் ராணா 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் ஹர்ட் ஆக ஷஷாங்க் சிங் மட்டும் அதிரடி காட்டினார். அவர் 11 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்து விளாச, ராகுல் திவேதியா, குருணால் பாண்ட்யா டக் அவுட்டானார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் 6 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுக்க இந்தியா 6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்தது. 

89 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் அப்பாஸ் அப்ரிடி - கவாஜா அதிரடி தொடக்கம் அளித்தனர். பந்துகளை இருவரும் சிக்ஸருக்கு மாறி, மாறி விளாசினர். குருணல் பாண்ட்யா, நடராஜன் ஓவர்களை இருவரும் விளாசித் தள்ளியதால் பாகிஸ்தான் ரன் உச்சத்திற்குச் சென்றது. 

அப்பாஸ் சிக்ஸர் மழை:

குருணல் பாண்ட்யா வீசிய முதல் ஓவரிலே முதல் பந்து தவிர எஞ்சிய 5 பந்துகளும் சிக்ஸருக்கு பறந்தது. நடராஜன் வீசிய அடுத்த ஓவரிலும் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரி வந்ததால் பாகிஸ்தான் 2 ஓவரிலே 59 ரன்களை எட்டியது. ஷஷாங்க் சிங் வீசிய 3வது ஓவரில்தான் இந்த ஜோடி பிரிந்தது.

பாகிஸ்தான் வெற்றி:

சிக்ஸர் மழை பொழிந்த அப்பாஸ் அப்ரிடி 8 பந்துகளில 5 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் சிக்ஸராக விளாசிய கவாஜா 12 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 41 ரன்கள் எடுத்து அவுட்டானாலும் அடுத்து வந்த இர்ஃபான் கான் சிக்ஸர் விளாச 3.5 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

குருணல் பாண்ட்யா ஒரே ஓவரில் 31 ரன்களையும், நடராஜன் ஒரே ஓவரில் 28 ரன்களும் விட்டுக்கொடுத்தனர். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், இங்கிலாந்து, இலங்கை , ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் பங்கேற்றுள்ளனர்.