கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட் திரைவட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் அடுத்த படத்தில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
‘டூட்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கீர்த்தீஸ்வரன் தனது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்பு காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
10 ஆண்டுகளுக்குப் பின் சிம்பு நயன் ஜோடி
சிம்பு மற்றும் நயன்தாரா இணைந்து நடிப்பது இது முதல் முறையல்ல. 2006-ம் ஆண்டு வெளியான ‘வல்லவன்’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். தொடர்ந்து, பாண்டிராஜ் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்திலும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்தப் படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. தற்போது வெளியாகியுள்ள தகவல் உறுதியானால், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரையும் ஒரே திரையில் பார்க்க முடியும்.
இதற்கிடையில், சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். மறுபுறம் நயன்தாரா, சுந்தர் சி. இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்.
மூக்குத்தி அம்மன் 2
‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ளது. 2020-ம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் தயாராகியுள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், காவல்துறை அதிகாரி உள்ளிட்ட இரட்டை வேடங்களில் அவர் நடித்திருப்பதாக டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. ரெஜினா கசாண்ட்ரா, சினேகா, குஷ்பு, ஊர்வசி, அபிநயா, இனியா, யோகி பாபு, துனியா விஜய், கருடா ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

