சென்னை,

சினிமாவுக்கு வந்த பிறகு ஜோதிடம், நியூமராலஜி போன்ற ஆன்மிகம் தொடர்பான விஷயங்கள் மீது எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்று நடிகை இனியா தெரிவித்துள்ளார்.

"வாகை சூடவா" நடிகை இனியா

மலையாள நடிகையான இனியா தமிழில் 'வாகை சூடவா', 'யுத்தம் செய்', 'மவுன குரு', 'மாசானி', 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சில புதிய படங்களில் நடித்து வரும் இனியா, சினிமாவுக்கு வந்த பிறகு தனக்கு ஆன்மிகத்தில் நம்பிக்கை வந்ததாக தெரிவித்திருக்கிறார்.

சினிமாவுக்கு வந்த பிறகு ஆன்மிகத்தில் நம்பிக்கை

சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் இனியா பேசும்போது, "சினிமாவுக்கு வந்த பிறகு ஜோதிடம், நியூமராலஜி போன்ற விஷயங்கள் மீது எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என்னுடைய உண்மையான பெயர் ஸ்ருதி. படத்துக்காக 'இனியா' என்ற பெயர் வைக்கப்பட்டது.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஆன்மிக நம்பிக்கைகள் எனக்கு அதிகமாக இருந்ததில்லை. ஆனால், திரைப்படங்களுக்குப் பூஜை போடுவது, கேமராவைத் தொட்டு வணங்குவது, நடனமாடுவதற்கு முன்பு குருவை வணங்குவது என ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு தெய்வீகத் தொடர்பு இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

பிடித்த கடவுள் என்றால் அம்மன்தான்

எனக்குப் பிடித்த கடவுள் என்றால் அம்மன்தான். அம்மன் கோவில்களுக்குச் சென்று வழிபடும்போது மனதுக்கு ஒரு மகிழ்ச்சியும், அதிர்ஷ்ட சக்தி நம்முடன் இருப்பதைப் போன்ற உணர்வும் கிடைக்கிறது. அம்மன் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.