சென்னை,

தென்னிந்திய திரைப்படங்களில் வடஇந்திய நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்து நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது பேசுபொருளாகி உள்ளன.

நடிகை ராதிகா ஆப்தே

தமிழில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வெற்றி செல்வன்’, ரஜினிகாந்தின் ‘கபாலி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது கடைசி தென்னிந்திய திரைப்படம் 2019-ம் ஆண்டு வெளியான ‘சித்திரம் பேசுதடி 2’.

இந்நிலையில், 2019-ம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்திய திரைப்படங்களில் ஏன் நடிக்கவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

நிறத்தை வைத்து நடிகைகள் தேர்வா?

இதற்கு பதிலளித்த ராதிகா ஆப்தே, “எனது பார்வையில், வடஇந்திய நடிகைகள் வெள்ளையாக இருப்பதால்தான் தென்னிந்திய திரைப்படங்களில் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நான் அதிகம் வெள்ளையாக இல்லை. தென்னிந்திய படங்களில் நடிக்க தென்னிந்திய நடிகைகளையே தேர்வு செய்யலாமே? எதற்காக வடஇந்திய நடிகைகளைத் தேடிச் செல்கிறார்கள்?.. தென்னிந்திய நடிகைகள் அழகானவர்கள், திறமையானவர்கள். அந்தந்த மொழிகளையும் நன்றாக அறிந்தவர்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். வேறு மொழி நடிகைகளை நடிக்க வைத்து, அவர்களுக்குப் பதிலாக மற்றொருவரை டப்பிங் பேச வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதுபோன்ற நடைமுறைகளை நான் ஊக்குவிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தென்னிந்திய மொழிகள் தெரியாததால் அந்த மொழிகளில் நடிப்பது தனக்கு சவாலாக இருந்ததாகவும், வசனங்களைப் பேசுவது மட்டுமின்றி காட்சிகளுக்கு ஏற்ப இயல்பாக நடிப்பதற்கும் மொழி அறிவு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அக்கா’ வெப் தொடரில் ராதிகா ஆப்தே

இதற்கிடையில், ராதிகா ஆப்தே தற்போது நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ‘அக்கா’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தத் தொடரை தர்மராஜ் ஷெட்டி இயக்கியுள்ளார். தென்னிந்தியப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தத் தொடரில் ராதிகா ஆப்தேவும், கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் தொடர் இன்று (அக்.30) நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. <