நடிகை ராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன் கொலை தொடர்பாக தேவராசு மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து எதற்காக இந்த கொலை நடந்தது என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் - எழில்செல்வி தம்பதியரின் மகன் பிரசாந்த் (வயது 19). எழில்செல்வி சென்னையில் உள்ள நடிகர் சரத்குமார் ராதிகா வீட்டில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மகன் பிரசாந்த் டைல்ஸ் போடும் கூலி வேலை செய்து வந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தனது மாமா ரமேஷ் என்பவருடன் டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு சென்னையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், இது குறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிரசாந்த்தை தேடி வந்தனர். செல்போன் டவர் லொகேஷன் வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சிறுவத்துறை சார்ந்த தேவராசு (18) தினேஷ் (23) ஆகிய இருவரையும் பிடித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. நண்பர்களான இவர்களுக்குள் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேவராசு, தினேஷும் பொன்னேரி கடற்கரை பகுதிக்கு பிரசாந்தை வரவழைத்து அவரை அடித்து புதைத்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தேவராசு மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து எதற்காக இந்த கொலை நடந்தது என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

