வாட்ஸ்அப் மூலம் தங்கள் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவித்தால் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைத்துவிடும்.
தமிழக அரசு
பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு மற்றும் குப்பை சேகரிப்பு போன்ற பணிகள் குறித்த புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
குடிநீர் தேவை
நகராட்சி நிர்வாகத்தின் மூலம் இதனை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேங்கும் குப்பைகளை விரைவாக அகற்றவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து செயல்படுத்தவும், குடிநீர் தேவையை தீர்க்கவும், தெருவிளக்கு பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணவும் இந்த முன்னோடி திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது.
மாநகராட்சி
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் குறைகளை ஏ.ஐ. மூலம் விரைவாக தீர்க்க வாட்ஸ்அப் வழியாக புகார்களை எளிதாக தெரிவிக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி நகராட்சி நிர்வாகம் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறை தீர்ப்பு அமைப்பை வடிவமைத்தல், மேம்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் பணி இதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
உள்ளாட்சி
அடிப்படை பிரச்சினைகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எழுத்து மூலமாகவோ, செல்போன் வழியாகவோ தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. வாட்ஸ்அப் மூலம் தங்கள் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவித்தால் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைத்துவிடும். அந்த அடிப்படையில் தான் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

