சென்னை,
குழந்தையைத் தேடி கண்டறிய உதவிய சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் இவ்வழக்கில் சிறப்பாகப் புலன்விசாரணை மேற்கொண்ட ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் தென்னரசு ஆகியோரை காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார்.
24 மணி நேரத்திற்குள் சிறுவன் மீட்பு
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், அவரது பெற்றோருடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில், காவல்துறையினர் உடனடியாகத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மேற்கண்ட சிறுவனை 24 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டு, அச்சிறுவனின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
டிஜிபி பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மேற்கண்ட சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து நேரில் கலந்துரையாடி உரிய அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து, சிறுவனை பெற்றோருடன் நலமுடன் ஒப்படைத்தனர்.
மேற்கண்ட வழக்கில் குழந்தையைத் தேடி கண்டறிய உதவிய சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் இவ்வழக்கில் சிறப்பாகப் புலன்விசாரணை மேற்கொண்ட ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் தென்னரசு ஆகியோரை காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

