சென்னை,

மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை நேரில் அழைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது :-

ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5வது ஆசிய பாரா விளையாட்டு 2026-ல் இந்தியாவுக்காக 3 தங்கம் - 5 வெள்ளி - 7 வெண்கலம் என 15 பதக்கங்களைக் குவித்த நம் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை இன்று நேரில் பாராட்டினோம். நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நினைவு கூர்ந்து, நம் வீரர்கள் அன்பையும் - மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

தங்கைகள் கஸ்தூரி ராஜாமணி, பேபி சஹானா ரவி, மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதி சிவன், துளசிமதி முருகேசன், சந்தியா விஸ்வநாதன் - தம்பிகள் மதன், சிவராஜன் சோலைமலை, நவீன் சிவக்குமார், தர்மராஜ் சோலைராஜ், ருத்திக் ரகுபதி, சுதர்சன் முத்துசாமி, சரவணக்குமார், ஹரிஸ் என ஆசிய பாரா விளையாட்டில் சாதித்த நம் மாற்றுத்திறன் வீரர்கள் இன்னும் பல்வேறு வெற்றிகளைப் பெற வாழ்த்தி மகிழ்ந்தோம்!

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.