விழுப்புரம்,
செஞ்சி அருகே குடும்பத் தகராறு காரணமாக பெற்ற 6 வயது மகனை தந்தையே கிணற்றில் தூக்கி வீசியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆண் குழந்தை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நல்லான்பிள்ளைபெற்றால் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவரது மனைவி தேவி (35). இந்தத் தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் மற்றும் 6 வயதில் சஞ்சய் என்ற ஆண் குழந்தை இருந்தான்.
செல்வராஜ் மற்றும் தேவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு கடன் வாங்கிய பணத்தை செலவு செய்தது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த தகராறு இன்று காலை வரையிலும் தொடர்ந்துள்ளது.
விவசாயக் கிணற்றில்..
தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செல்வராஜ், தனது 6 வயது மகன் சஞ்சயை தூக்கிக்கொண்டு சென்று அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள விவசாயக் கிணற்றில் சிறுவன் சஞ்சயை தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனை மீட்பதற்காக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சடலமாக மீட்பு
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி சிறுவன் சஞ்சயை சடலமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனின் தந்தை செல்வராஜை கைது செய்து சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் குடும்பத் தகராறு மற்றும் சிறுவனை கிணற்றில் வீசியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

