நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 7 நாட்களில் 90 காசுகள் உயர்ந்துள்ளது. குளிர்காலம் மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக தேவை அதிகரித்ததால் விலை உயர்வு ஏற்பட்டது. பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

தொடரும் விலை உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 29-ந் தேதி 570 காசுகளாக இருந்தது. அதன் பின்னர் தினசரி உயர்ந்த முட்டை விலை நேற்று 650 காசுகளாக இருந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.

இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குளிர் காலம் மற்றும் தீபாவளி பண்டிகையும் நெருங்கி வருவதால் முட்டையின் தேவை தொடர்ந்து அதிகரித்துள்ளதால் அதன் விலையை மேலும் 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முட்டை விலை 660 காசுகளாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமுலுக்கு வந்தது.

7 நாட்களில் 90 காசுகள் உயர்வு

இதனால் கடந்த 7 நாட்களில் மட்டும் முட்டை விலை 90 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் 23-ந் தேதி முட்டையின் கொள்முதல் விலை 680 காசுகளாக இருந்தது. அது தான் முட்டை வரலாற்றில் அதிக பட்ச விலையாகும். தற்போது தினசரி விலை உயர்ந்து வருவதால் அந்த விலையை ஓரிரு நாட்களில் தொட்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்னர்.

சேலம், நாமக்கல் மாவட்ட சில்லரை விற்பனை கடைகளில் முட்டை விலை 8 ரூபாயை நெருங்கி உள்ளது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 117 ரூபாயாகவும், முட்டை கோழி விலை 100 ரூபாயாகவும் நீடிக்கிறது.