இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
என்ன கதை? இதுவரை தமிழ் சினிமா பார்க்காத கதையொன்றும் இல்லை. நாயகி நயன்தாரா காவலராக சென்னையில் வசிப்பவர். அவருக்கு இரவில் அடிக்கடி மைலாஞ்சி என்கிற ஊர் குறித்த சித்திரமும் அமானுஷ்ய விஷயங்களும் நினைவுக்கு வருகின்றன. அப்போது, நரபலி கொடுக்கும் கும்பலைப் பிடித்து காவல்துறை மேலதிகாரியிடம் பதவி உயர்வு பெறுகிறார் நயன். அங்கு, இன்னொரு பெண் காவலருக்கு மைலாஞ்சி என்கிற ஊருக்கு பணியிட மாற்றம் கிடைக்கிறது. நமக்கும் மைலாஞ்சிக்கும் இருக்கும் தொடர்பு என்ன என்கிற ஆர்வத்தில் நாயகி அந்த ஊருக்குத் தானே செல்வதாகக் கிளம்புகிறார். அங்கு சென்ற பின்பு முன்னொரு காலத்தில் மைலாஞ்சிக்கும் தனக்கும் இருக்கும் தொடர்பை அறிகிறார். இதில், அம்மன் எங்கிருந்து எதற்காக வந்தார்? மைலாஞ்சிக்குச் சென்ற நாயகி நயன்தாராவுக்கும் அம்மன் தெய்வத்திற்கும் என்ன தொடர்பு? என்கிற கதையாகவே மூக்குத்தி அம்மன் - 2 உருவாகியுள்ளது.
அம்மன், அம்மன் அருள், கண்ணாத்தா, கோட்டை மாரியம்மன், பாளையத்தம்மா என ஏகப்பட்ட பக்தித் திரைப்படங்கள் தமிழில் வெளியானாலும் அவற்றிலிருந்து மாறுபடும் விதமாக அம்மனுக்கு ஒரு பிரச்னை அதை அம்மனே மறு பிறப்பு எடுத்து வந்து சரிசெய்தால் எப்படி இருக்கும் என வித்தியாசமாக யோசித்த சுந்தர். சி அதற்கென்றே கதையைத் தயார் செய்திருக்கிறார். இடைவேளைக்கு முந்தைய மற்றும் கிளைமேக்ஸில் இக்கதையைப் பிரம்மாண்டமாகக் காட்ட வேண்டும் என விஎஃப்எக்ஸ் கலைஞர்களும் கிடைத்த பட்ஜெட்டுக்கு முழு உழைப்பைக் கொட்டியுள்ளனர்.
சுந்தர். சி திரைப்படமென்றால் நகைச்சுவையாக ஆரம்பித்து மெல்ல கதைக்குள் ஆக்ஷனுடன் இறங்கி பின் உணர்வுப்பூர்வமாக மாறும் ஃபார்முலா இருக்கும். இப்படத்திலும் அவை இருக்கின்றன. ஆனால், எதற்காக என்றுதான் தெரியவில்லை. இத்தனையாண்டு சுந்தர். சி திரைப்படங்களில் சிரிப்பே வராத நகைச்சுவைக் காட்சிகள் இதில்தான் இடம்பெற்றிருக்கின்றன. யோகி பாபு, ஊர்வசி, சிங்கம் புலி என சிரிக்க வைக்க ஆள்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். சிரிப்புக்கான எந்த வசனங்களும் கைகொடுக்கவில்லை. இரண்டாவதாக, ஆக்ஷன்; படம் முழுக்க அம்மன்கள் விதவிதமாகச் சண்டையிடுகின்றனர். ஏன், எதற்கு எனப் புரிவதில் தடங்கல்கள் ஏற்படுகின்றன. இந்தக் கதைக்கு ஏன் இந்தக் காட்சி என பல காட்சிகளைச் சுட்டிக்காட்டும் அளவிற்கு வலுவில்லாத திரை எழுத்து. உணர்வுப்பூர்வமாக எந்த விஷயங்களும் ரசிகர்களைச் சென்றடையாதது மிகப்பெரிய பலவீனம்.

தமிழ் சினிமா எவ்வளவோ அம்மன் கதைகளை எடுத்துவிட்டது. மனிதர்கள் தங்களால் தாக்குப்பிடிக்க முடியாத தீயசக்திகளால் பாதிக்கப்படும் போது அம்மன் வருவதுதான் இங்கு எமோஷன். ஆனால், இப்படத்தில் அம்மன் வருவதையே தாக்குப்பிடிக்க முடியாத அளவு திரைக்கதையும் கதையும் மலிந்து கிடக்கின்றன. இந்த மாதிரி திரைப்படங்களுக்கு லாஜிக் தேவையில்லைதான். ஆனால், ஒரு காட்சியில் அம்மன் எதிரிகளைப் பறக்க விடுகிறார். இன்னொரு காட்சியில் பாறையின் எடையைத் தாங்க சிரமப்படுகிறார்.
விஎஃப் எக்ஸ் காட்சிகள் சில காட்சிகளில் தரமாக இருந்தாலும் பெரும்பாலும் ஏஐ போல் தோற்றமளித்தன. செட் அமைப்புகளும் நம்பகத்தன்மையை அளிக்கவில்லை. மிக செயற்கையாகத் தெரிவதால் காட்சியிலிருந்து விலகலைக் கோருகின்றன. அரசியலுக்கு வந்த சுந்தர். சி மதுரை மத்திய தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளருக்கும் இவருக்கும் வார்த்தை சண்டையே நடந்தது. திரைப்படம் எடுக்கும் வாய்ப்புள்ள சுந்தர். சி சும்மா விடுவாரா? மூக்குத்தி அம்மன் - 2ல் வில்லன்களாக வரும் நடிகர்கள் சுனில், கருட ராம் இருவரையும் கருப்பு - சிவப்பு உடையில் தீயசக்திகளாகக் காட்டியிருக்கிறார். குறியீடா?
நடிகை நயன்தாராவுக்கும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பான கதாபாத்திரமும் இல்லை. அம்மன் தோற்றத்தில் மட்டும் கவரும் நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆனால், மற்ற காட்சிகளில் இருக்கிறாரா இல்லையா என்கிற நிலைதான். நடிகை ஊர்வசி ஆரம்பத்தில் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். சில உணர்ச்சிகளைக் கொடுத்ததால் அவரது நடிப்பில் எந்தக் குறையும் தெரியவில்லை. வில்லியாக நடித்த நடிகை ரெஜினா கேசண்ட்ரா உடல் எடையைக் குறைத்ததற்குப் பின் வேறு ஆள் மாதிரி தெரிகிறார். சில வசனங்களில் டப்பிங் சரியாக பேசப்படவில்லை. உதடுகள் ஏதோ சொல்ல வார்த்தைகள் எங்கோ இருக்கின்றன. இரண்டு பிரபல நடிகைகள் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கின்றனர். ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்கள் கிளைமேக்ஸில் பெரிதாக சோபிக்கவில்லை.
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ஆத்தாவை ஹைப் ஆக்குகிறேன் என தலை வலிக்காத குறையாக சப்தங்களைக் கூட்டி காதுகளை அடைக்க வைக்கிறார். ஆரம்பத்தில் சில பின்னணி இசைகள் கதைக்கான பதற்றத்தைக் கடத்தினாலும் காட்சிகள் செல்ல, செல்ல இசை மட்டும் எங்கோ கடும் ஆக்ரோஷமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. பாடல்களும் மோசம்.
இந்தத் தீபாவளிக்கு குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படத்தைக் கொடுக்க வேண்டும் என இயக்குநர் சுந்தர். சி விரும்பியிருக்கிறார். ஆனால், அதற்கான எழுத்தும் ஆக்கமும் சரியாகக் கைகொடுக்கவில்லை.
மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படத்தின் முதல் பெரிய எதிர்பார்ப்பே இதனை சுந்தர். சி இயக்குகிறார் என்பதில் இருந்துதான் ஆரம்பமானது. அந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருப்பது போல் ரசிகர்களின் ரசனை மீதும் சுந்தர். சி கவனம் வைத்தால் எப்படி 12 ஆண்டுகள் கழித்தும் மதகஜராஜாவை ஹிட் ஆக்க முடிந்ததோ அதே போல் உடனே எடுத்து உடனே வெற்றியைக் கொடுக்கவும் அவரால் முடியும். இந்த முறை மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படத்தில் அந்த வெற்றி வாய்ப்பு நழுவிவிட்டது என்றுதான் சொல்ல தோன்றுகிறது. கூடுதலாகச் சொல்ல வேண்டுமென்றால், மூக்குத்தி அம்மன் எனப் பெயர் வைத்து காது குத்த முயன்றிருக்கிறார்கள்!

