சென்னை: பள்ளி அறிவியல் பாடத்தில் விண்வெளி தொடர்பான பாடமும் இடம்பெற வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் யோசனை தெரிவித்தார்.
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் ரஷ்யாவை சேர்ந்த யூரி காகரின் ஆவார். ரஷ்ய நாட்டின் நிதியுதவியுடன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வாளகத்தில் யூரி காகரின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது.
அம்மையத்தின் செயல் இயக்குநர் கே.சண்முக சுந்தரம் தலைமையில் நேற்று நடைபெற்ற விழாவில், இஸ்ரோ தலைவர் நாராயணன், சென்னையில் உள்ள ரஷ்ய துணைத் தூதர் வலேரி கோட்சேவ் ஆகியோர் இணைந்து யூரி காகரினின் சிலையைத் திறந்து வைத்தனர்.
இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுடன் நாராயணன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவின் விண்வெளி பயணத்தில் சோவியத் யூனியன் முக்கியப் பங்காற்றி உள்ளது.
இந்திய விண்வெளி வளர்ச்சிக்கு ரஷ்யா அளித்த உதவியை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். ஒருகாலத்தில் விண்வெளித் தொழில்நுட்பத்துக்காகப் பிற நாடுகளைச் சார்ந்திருந்த இந்தியா, தற்போது மற்ற நாடுகளின் விண்வெளித் துறை வளர்ச்சிக்கும் உதவி செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தற்போது அதிகளவில் நடைபெற்று வருகிறது. 1969-ம் ஆண்டு நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்தான். அடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளனர்.
ஆனாலும் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்று வந்தவர் யூரி காகரின். இந்தியாவிலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பள்ளிகளில் அறிவியல் பாடங்களுடன் விண்வெளி தொடர்பான பாடங்கள் இடம்பெற வேண்டும். அவற்றைக் கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
மழை தொடர்பான விவரங்களைக் கணிக்க வேண்டும் என்றால் நிறைய தரவுகள் தேவைப்படும். அது அந்த துறையில் பணியாற்றுபவர்களால் மட்டுமே முடியும்.
மழை பெய்வதை முன்கூட்டியே கணிப்பது, தட்பவெப்ப நிலையைச் சரியாக கணிப்பது போன்ற பணிகள் வானிலை துறைக்குரியவை. அவர்களுக்கு தேவையான தரவுகளை செயற்கைக்கோள் மூலம் இஸ்ரோ வழங்குகிறது.. இவ்வாறு அவர் கூறினார்.
பசுமை வழிச் சாலையில் புதுப்பிக்கப்பட்ட முகாம் இல்லத்தில் குடியேறிய முதல்வர்
