பாப்பிரெட்டிப்பட்டி,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொம்மிடி வடசந்தையூரில் நடந்த ஆட்டுச்சந்தையில், ரூ.1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்தது.
ஆட்டுச்சந்தை
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ஊராட்சி வடசந்தையூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, நல்லம்பள்ளி, திப்பம் பட்டி, கம்பைநல்லூர், கடத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளும், வியாபாரிகளும், 1,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
ஆடுகளை வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் திரளாக வந்திருந்தனர். சந்தையில் 10 கிலோ எடையுள்ள ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையும், ஆட்டுக்குட்டிகள் ரூ.3,500 முதல் ரூ.7 ஆயிரம் வரையும் விற்பனையாகின. குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை விற்பனையாகின.
பொம்மிடி சந்தையில் கடந்த வாரம் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனையான நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று ரூ.1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

