சென்னை,
சர்வதேச எம்மி விருது மேடையில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, சர்வதேச அளவில் நடைபெறும் எம்மி விருது விழாவில் விருது வழங்க உள்ளார். இதன் மூலம் சர்வதேச எம்மி விருது மேடையில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.
நியூயார்க்கில் 54-வது எம்மி விருது விழா
54-வது சர்வதேச எம்மி விருது விழா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் நவம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்குத் துறையினரின் படைப்புகள் இந்த விழாவில் அங்கீகரிக்கப்பட உள்ளன.
இந்த விழாவில் விருது வழங்கும் பிரபலங்களில் ஒருவராக நடிகர் விஜய் சேதுபதியும் பங்கேற்க உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு கிடைத்துள்ள புதிய பெருமை
சர்வதேச எம்மி விருது மேடையில் இந்திய நடிகர் ஒருவர் விருது வழங்குவது இதுவே முதல் முறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற பிரைம் டைம் எம்மி விருது விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா விருது வழங்கியிருந்தார். அதேபோல், 2024-ம் ஆண்டு சர்வதேச எம்மி விருது விழாவை நகைச்சுவை நடிகர் வீர்தாஸ் தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி சர்வதேச எம்மி விருது மேடையில் விருது வழங்க உள்ளார். இதன் மூலம் இந்தியத் திரையுலகிற்கு மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

