சென்னை,

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 34 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் மூலம் 3 வகையான உணவுப் பொருட்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டுள்ளது. அதில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்கு 1,300 மெட்ரிக் டன் டபுள் ரோஸ்ட் ரவை (1 கிலோ பாக்கெட்), 1,200 டன் சம்பா ரவை (1 கிலோ பாக்கெட்), 1,300 டன் சேமியா (200 கிராம் பாக்கெட்) ஆகியவை கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

வரும் ஜனவரி 1-ந் தேதியில் இருந்து 3 மாதங்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் தேவையாக உள்ளன. இந்த பொருட்களை வழங்க அகில இந்திய அளவில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி வரவேற்கப்படுகிறது. நேற்று (2-ந்தேதி) காலையில் இருந்து இதற்கான ஒப்பந்தப்புள்ளி படிவம் பதிவிறக்கத்திற்கு தயாராக உள்ளது. வரும் டிசம்பர் 2-ந்தேதிவரை ஒப்பந்தபடிவத்தை சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.