சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று... நவம்பர் 4.

99-ஆம் ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் அன்றைய சென்னை மாகாணத்தில் 100% வகுப்புவாரி பிரதிநிதித்துவ இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான மூன்றாவது கம்யூனல் ஜி.ஓ எனப்படும் அரசாணை எண் 1071 நிறைவேற்றப்பட்டது. அதை சாத்தியமாக்கியவர்கள் அன்றைய முதல்-அமைச்சர் ப.சுப்பராயனும், கல்வித்துறை அமைச்சரான கும்பகோணம் முத்தையா முதலியாரும்.

அதன்பின் 1935-ம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கும் நீட்டிக்கப்பட்ட 100% இட ஒதுக்கீடு, 1950-ம் ஆண்டு செண்பகம் துரைராஜன் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளிக்கும் வரை நீடித்தது. அதன்பின் 1951-ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட முதல் திருத்தத்தின் பயனாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25%, பட்டியலினத்தவருக்கு 18% என மொத்தம் 41 விழுக்காட்டுடன் தொடங்கிய புதிய இட ஒதுக்கீடு இப்போது 69% ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், இது முழுமையானதல்ல.

இந்தியாவில் இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்திய, உள் இட ஒதுக்கீடும் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பும் வழங்கிய முதல்-அமைச்சர்கள் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கும், பல்வேறு காலகட்டங்களில் சமூகநீதிக்காக போராடி இட ஒதுக்கீட்டை வென்றெடுத்த பொப்பிலி ராஜா, ஆற்காடு ராமசாமி முதலியார், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாட்டில் மட்டும் 4 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்த சமூகநீதிக்காவலர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் போற்றத்தக்கவர்கள். சமூகநீதி வரலாற்றில் என்றென்றும் அவர்கள் பெயர் நிலைத்திருக்கும்.

ஆனால், தமிழ்நாட்டில் இப்போது நிலவுவது முழுமையான சமூகநீதி அல்ல. ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடஓதுக்கீடு வழங்குவது தான் முழுமையான சமூகநீதி. அந்த இலக்கை அடைவதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்காய்வு நடத்தப்படும்; அதற்கான ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது. அதற்கான அடுத்தடுத்த நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் 100% வகுப்புவாரி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு தொடக்கத்தை கொண்டாடும் வேளையில், சமூகநீதிக்காக பங்களித்த, உயிர்தியாகம் செய்த அனைவரையும் வணங்குவோம். அதே வேளையில் 100% சாதிவாரி பிரதிநிதித்துவ இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்குவதற்கான போராட்டங்களை மேலும் கூர்மைப்படுத்த இந்த நாளில் உறுதியேற்றுக் கொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.