மதுரை,
மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரரை கைதி ஒருவர் தாக்கியதில் அந்த போலீஸ்காரர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
மதுரை மத்திய சிறையில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார்
தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 17 கைதிகள் கடந்த 26-ந் தேதி இரவு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பி ஓடிய அனைத்து கைதிகளையும் போலீசார் விரைந்து பிடித்து மீண்டும் பல்வேறு சிறைகளில் அடைத்தனர். இதன் எதிரொலியாக அனைத்து சிறைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறைத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி மதுரை மத்திய சிறையிலும் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு பணியில் சிறை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சிறையின் நுழைவு வாயில் முன்பு துப்பாக்கி ஏந்தியவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ்காரரை தாக்கிய கைதி
இந்த நிலையில் திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபர் ஒருவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள போலீஸ்காரர் அவரிடம் விசாரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கைதி, போலீஸ்காரரை முகத்தில் தாக்கியதில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.
சிறை ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை
இதனை தொடர்ந்து சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் எதுவும் தெரிவிக்க வில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.

