சென்னை,

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த 5 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.

2 தொகுதிகளில் வெற்றி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்தது. ஆனால் ஆட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையில், அதிமுக கட்சியில் இருந்து வெற்றிபெற்ற 25 எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சி தலைமையின் உத்தரவையும் மீறி, த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளித்தனர்.

இதனால் அ.தி.மு.க. கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. அக்கட்சி யின் எம்.எல்.ஏ.க்கள் சிலர் ராஜினாமா செய்து த.வெ.க. கட்சியில் இணைந்தனர். இதனால் 7 தொகுதிகள் காலியாகின. அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த மரகதம் குமரவேலும், சத்தியபாமாவும் அதே தொகுதிகளில் முறையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

தேர்தல் கமிஷன் தயார்

அடுத்ததாக காலியாக உள்ள புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கரூர், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, முதல்-அமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகள் தொடர்பான வழக்கில், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது.

இந்த வழக்கில் தீர்ப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுவதை அடுத்து, 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை டிசம்பர் மாதம் முடிவடைந்து, ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், இதில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது வாக்குச்சாவடிக்கான புதிய பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. 56 வாக்குச்சாவடிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு, வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் செய்வது உள்ளிட்ட பணிகள் குறித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

போட்டியில் யார்-யார்?

மேலும், அனைத்து அரசியல் கட்சிகளும் இடைத்தேர்தலுக்கு தங்களை தயார்ப்படுத்தி வருகின்றன. திருச்சி கிழக்கு தொகுதி (முதல்-அமைச்சர் விஜய் ராஜினாமா செய்த தொகுதி) தவிர மற்ற தொகுதிகளுக்கு. அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.விற்கு சென்ற சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), அம்பாசமுத்திரம் (இசக்கி சுப்பையா), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகிய 4 பேருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அவர்களை எதிர்த்து போட்டியிடும் மற்ற கட்சியினர் யார்-யார்? என்பது குறித்த பேச்சுகள் பரபரப்பாகியுள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.