சென்னை,

தமிழகத்தில் கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 17.72 லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில், நீதித்துறையின் கட்டமைப்புகளை ஒரு புறம் அரசு நவீனப்படுத்த முயற்சித்து வரும் நிலையில் மறுபுறம் நிலுவை உள்ள வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, 2016க்கு பின் இதன் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக, தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பான நேஷனல் ஜூடிசியல் டேட்டாகிரிட் தெரிவித்துள்ளது.

17.72 லட்சம் வழக்குகள்

அதன்படி, நடப்பாண்டு நவ. வரை தமிழகத்தில் உள்ள கோர்ட்டுகளில் 10.78 லட்சம் கிரிமினல் வழக்குகள் மற்றும் 6.97 லட்சம் சிவில் வழக்குகள் என மொத்தம் 17.72 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் 3 லட்சம் சிவில் மற்றும் 10.28 லட்சம் கிரிமினல் மொத்தம் 13.28 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. அதாவது. இதுவரை பதிவான மொத்த சிவில் வழக்குகளில் 30 சதவீதம் மட்டுமே தீர்வு காணப்பட்டு உள்ளது.

வழக்கு நிலுவை காலத்தை பொறுத்தவரை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் 1.58 லட்சம்: 10 ஆண்டுகளுக்கு மேல் 44 ஆயிரத்து 477; 20 ஆண்டுகளுக்கு மேல் 3,059; 30 ஆண்டுகளுக்கு மேல் 352 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

அதேபோல், வழக்குகள் நிலுவையில் உள்ள மாவட்டங்களில், உயர்நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள சென்னை மாவட்டம், 1.30 லட்சம் வழக்குடன் முதல் இடத்தில் இருப்பது, சட்ட வல்லுனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நிலுவை வழக்குகளுக்கு, நீதிமன்றம்கள் மட்டும் பொறுப்பாக முடியாது. சாட்சிகள் தாமதம், தலைமறைவு, மேல்முறையீடு, தடை உத்தரவு கோரும் மனுக்கள், குற்றப்பத்திரிகை தாமதம் உள்ளிட்டவை வழக்குகள் நிலுவைக்கு முக்கிய காரணங்களாகும். அரசு தரப்பில் நீதி மன்றங்களை நவீனப்படுத்துவதோடு மட்டுமின்றி, நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்களின் காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்பப்படுவதே வழக்குகள் தேங்குவதை தடுப்பதற்கான முக்கிய தீர்வுகளாகும்.