வெள்ளை நிற பந்து கிரிக்கெட் தொடர்களான டி20 மற்றும் ஒருநாள் பாேட்டித் தொடர்களில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகளில் இந்தியா சமீபகாலமாக திணறி வருகிறது என்றே கூற வேண்டும்.
வெற்றிக்கு தவிக்கும் இந்தியா:
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த 21ம் நூற்றாண்டில் கொடி கட்டிப் பறந்து வந்த இந்தியா சமீபகாலமாக வெற்றி பெறவே போராடி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் இந்தியாவின் டெஸ்ட் தரவுகளை எடுத்துப் பார்த்தாலே இதன் வீரியத்தை உணர முடியும்.
2025ம் ஆண்டு முதல் இந்திய அணி 12 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஆடியுள்ளது. அதில் 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த 6 வெற்றிகளில் உள்நாட்டிலே 4 வெற்றிகள் கிடைத்துள்ளது. அதுவும் இலங்கை, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தலா 1 வெற்றியும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 வெற்றியும் கிடைத்துள்ளது.
2025ம் ஆண்டு முதல் இந்திய அணி ஆடிய டெஸ்ட் போட்டிகள்:
1. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கடைசி டெஸ்ட் - இந்தியா தோல்வி ( ஆஸ்திரேலிய மண்ணில்)
2. இங்கிலாந்திற்கு எதிரான தொடர் - 2-2 என்ற கணக்கில் தொடர் ( மொத்தம் 5 டெஸ்ட் - இங்கிலாந்து மண்ணில்)
3. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர் - 2-0 என்ற கணக்கில் இ்ந்தியா வெற்றி - (இந்திய மண்ணில் மொத்தம் 2 டெஸ்ட்)
4. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடர் - 2 - 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வி ( இந்திய மண்ணில் மொத்தம் 2 டெஸ்ட்)
5. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் - 1-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி ( இந்திய மண்ணில்)
6. இலங்கைக்கு எதிரான தொடர் - 1 -0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி ( இந்திய மண்ணல் வெற்றி மொத்தம் 2 டெஸ்ட்)
தாக்கம் ஏற்படுத்தாத கம்பீர் - கில் காம்போ:
தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மொத்தம் 2 போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி முதல் போட்டியில் கிடைத்த வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது. கம்பீர் - கில் கூட்டணி இதுவரை டெஸ்ட் தொடர்களில் பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இங்கிலாந்து தொடரில் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது மட்டுமே மெச்சத்தகுந்த வெற்றியாக கருதப்பட்டது.
ஆனால், அந்த தொடர் முழுவதும் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததாலே அந்த வெற்றியும் சாத்தியமானது என்று சில விமர்சனங்கள் உள்ளது. ஆனால், அந்த பேட்டிங்கி்ற்கு சாதகமான மைதானங்களிலும் இந்திய பந்துவீச்சு திறம்பட இருந்தது. குறிப்பாக, முகமது சிராஜ் அசத்தலாக வீசினார். ஆனால், அவருக்கு நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

