சென்னை: தமிழக பாஜக சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் விழா, சென்னை தி.நகரில் நேற்று கொண்டாடப்பட்டது. மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழக ரயில்வே மேம்பாட்டுக்காக ஆண்டுக்கு ரூ.870 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிதி ஒதுக்கீடு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. தற்போது தமிழகத்துக்கான ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.7,600 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக ரூ.48,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திட்டங்களுக்குத் தேவையான சுமார் 4,800 ஹெக்டேர் நிலத்தில் இதுவரை 1,253 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, தேவையான நிலத்தில் 24 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தி வழங்குவது மாநில அரசின் பொறுப்பு.
தமிழகத்தில் தீபம் ஏற்றுவதற்கு தடைகள் ஏற்படுத்தப்படலாம். ஆனால், தமிழக மக்களின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் யாராலும் தடுக்க முடியாது. தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.
மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் தமிழகத்துக்கு வந்தே பாரத் ரயில்கள் கிடைக்காது என்று சிலர் குற்றம் சாட்டினர். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் தவறானவை.
அடுத்த முக்கிய இலக்காக புல்லட் ரயில் திட்டம் உள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், நாட்டின் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். சென்னை - பெங்களூரு இடையே தற்போது பயணிக்க 5 முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டால் இந்தப் பயண நேரம் சுமார் 73 நிமிடங்களாகக் குறையும்.
இது விமானப் பயணத்தைக் காட்டிலும் விரைவானதாக இருக்கும்.அதேபோல, சென்னை - ஹைதராபாத் இடையே தற்போது 8 முதல் 12 மணி நேரம் வரைபயண நேரம் உள்ள நிலையில், புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் ஹைதராபாத் - அமராவதி - சென்னை இடையிலான பயணத்தை சுமார் 3 மணி நேரத்தில் மேற்கொள்ள முடியும்.
இந்தியாவில் புல்லட் ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தியப் பொறியாளர்களின் திறமையையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் உலக நாடுகள் வியந்து பார்க்கின்றன.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த தமிழ்நாடு, வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.
100 நாளில் கல்லூர் ரயில் நிலையம்
நிகழ்ச்சியில் பேசிய தமிழகப் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “திருநெல்வேலி – அம்பாசமுத்திரம் இடையே உள்ள கல்லூர் ரயில் நிலையம் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. அதை மீண்டும் திறந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அதை கேட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உடனடியாக மேடையில் இருந்தவாறே ரயில்வே வாரியத் தலைவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே கல்லூர் ரயில் நிலையம் 100 நாட்களுக்குள் மீண்டும் திறக்கப்படும் என்று அவர் அறிவித்தார். அதை பார்த்த பாஜக நிர்வாகிகள் ஆச்சரியம் அடைந்து எழுந்து நின்று கைதட்டி அமைச்சருக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும்: முதல்வர் விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் கடிதம்
