சென்னை: பணி நியமனங்களில் ரூ.634 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சகோதரரின் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்பியதில் ரூ.634 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மத்திய அரசின் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, நேரு தொடர்புடைய இடங்கள் உட்பட 25 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த அக்.29-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் 170 ஆவணங்கள், 13 மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே, நவ.2-ம் தேதி உச்ச நீதிமன்றமும் நேருவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ரூ.634 கோடி முறைகேடு புகார் தொடர்பான விசாரணை தீவிரமடைந்தது.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் நேரு சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனின் உதவியாளர் கவி பிரசாத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்ல முயன்றபோது, சென்னை விமான நிலையத்தில் இவரை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது விசாரணை நடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள கூடுதல் தகவல்கள், ஆதாரங்களின் அடிப்படையில், சென்னையில் அவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
நிலம் விற்பனை தொடர்பான வழக்கு விவகாரத்தில் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்
