சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் காணாமல் போன தனது கணவர் சங்கர் ராஜை கண்டுபிடித்து ஒப்படைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, பி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சங்கர் ராஜை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து திருக்கோவிலூர் டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பேர் காணாமல் போய் உள்ளனர். நவீன ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, வழக்குகளின் புலன் விசாரணை நிலை என்ன என்பது குறித்து தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐஜி பிரதீப் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த அக்.30 முதல் நவ.13 வரை தமிழகம் முழுவதும் மாயமானவர்களில் 624 ஆண்கள், 1,469 பெண்கள், 128 சிறுவர்கள், 289 சிறுமிகள் என மொத்தம் 2,510 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2016 முதல் தற்போது வரை 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 3 லட்சத்து 4,534 பேர் மாயமாகி உள்ளனர். இதுதொடர்பாக 2 லட்சத்து 79,865 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 லட்சத்து 88,575 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 15,959 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. காணாமல் போனவர்கள், அநாதையாக இறப்பவர்களை அடையாளம் காண இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
நிலம் விற்பனை தொடர்பான வழக்கு விவகாரத்தில் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்
