ஆவடி மாநகராட்சியில், பொதுமக்கள் புகார்கள் மற்றும் பரிந்துரைகளை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்ய பிரத்யேக 'மொபைல் செயலி' ஒன்றை தயார் செய்ய ஆவடி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஆவடி மாநகராட்சியில், குப்பை, கழிவு நீர், மின்விளக்கு, குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு 044–26554440 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர்.

அந்தப் புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், புகார் கொடுத்ததற்கு ஆதாரமும், புகார்கள் சரி செய்யப்பட்டது பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், தற்போது உள்ள டிஜிட்டல் சூழலுக்கு ஏற்றவாறு, பொதுமக்கள் ஆன்லைனில் புகார்களை தெரிவிக்க ஆவடி மாநகராட்சிக்கு பிரத்யேகமாக 'மொபைல் செயலி' ஒன்றை தயார் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து, பொதுமக்கள் புகார்கள் மற்றும் பரிந்துரைகளை பதிவு செய்ய பிரத்யேகமாக 'மொபைல் செயலி' ஒன்றை தயார் செய்ய ஆவடி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து கமிஷனர் அம்பிகா ஜெயின் கூறுகையில், “மொபைல் செயலி உருவாக்குவது தொடர்பாக முதற்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதாவது யோசனைகள் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். அதை நாங்கள் பரிசீலிப்போம்” என்றார்.

The Avadi Municipal Corporation has decided to develop a dedicated mobile application to allow the public to register their complaints and suggestions online.