விழுப்புரம்,

மாயமான செஞ்சி சிறுமி கிடைக்க வேண்டி போலீஸ் நிலையத்தில் போலீசார் யாக பூஜை நடத்தியுள்ளனர்.

சிறுமி மாயம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா கடந்த மாதம் 12-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினர். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

போலீசார் திணறல்

தற்போது இந்த வழக்கை சி..பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் சிறுமி மாயமாகி 40 நாட்களுக்கு மேலாகியும் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

யாக பூஜை

இந்த நிலையில் மாயமான சிறுமி கிடைக்க வேண்டி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை சிறப்பு யாகம் வளர்த்து போலீசார் பூஜை செய்தனர். சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மற்ற போலீசாரும் இதில் பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.