நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளியின் போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின்ரிசர்வ் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் (நவ. 19) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்ஸ்:
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களை சேர்த்த நிலையில், 2-ஆம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்குப் பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
உணவு இடைவேளைக்கு முன்பு நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை எடுத்தது. இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அன்ஷூல் கம்போஜ் ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
எனினும், நேற்றைய 2-ஆம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு பிறகு பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி வெறும் 51 ரன்களை சேர்க்கும் போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முதல் இன்னிங்ஸில் அந்த அணி 368 ரன்களை எடுத்தது. இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகள், அன்ஷூல் கம்போஜ் 2 விக்கெட்டுகள் மற்றும் பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் கைப்பற்றினர்.
இந்தியா நிதான ஆட்டம்:
இதைத் தொடர்ந்து பேட்டிங் தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. ஜெய்ஸ்வால் 85 ரன்களை எடுத்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
நேற்றைய 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் கே.எல். ராகுல் 52 ரன்களும், தேவ்தத் படிக்கல் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (நவ. 21) தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடர்ந்தது. இந்திய அணிக்கு கே.எல். ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஜோடி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தியது.
இன்றைய 3-ஆம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 93 ரன்களுடனும், தேவ்தத் படிக்கல் 53 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 1 விக்கெட் கைப்பற்றினார். 3-ஆம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 129 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

