சென்னை,

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் மேட்டூர் அணையை திறக்க முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரூ.31 கோடியில் உபரி நீர் திறப்பு மேலாண்மை திட்டம்

வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏரிகளுக்கு அதிக நீர்வரத்து கிடைக்கிறது. அத்தகைய நேரங்களில் ஷட்டர்களை திறந்து, அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்படுகிறது. எனவே ஏரிகளுக்கு வரும் நீர்வரத்தை 'ஸ்காடா' எனப்படும் நவீன மென்பொருள் சென்சார் வாயிலாக, ஆன்லைனில் கண்காணித்து, உபரி நீர் திறப்பை மேலாண்மை செய்ய, முந்தைய தி.மு.க. ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் ரூ.31 கோடி மதிப்பில் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம்

இதற்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் சென்னை, காமராஜர் சாலை, நேப்பியர் பாலம் அருகே ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை வளாகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது. துணை கட்டுப்பாட்டு மையங்கள் தொடர்புடைய ஏரிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மென்பொருள் சர்வர்கள் வாயிலாக ஏரிகள் 24 மணிநேரமும் சி.சி.டி.வி. கேமரா வாயிலாக கண்காணிக்கப்படுகின்றன.

நீர்வளத்துறையின் 90 அணைகளையும் கண்காணிக்க முடிவு

சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தேவைப்படும்போது ஏரிகளின் மதகு, கதவுகளை, 'ஆன்லைன்' வாயிலாக திறந்து, நீரை வெளியேற்ற முடியும். இந்த நடைமுறையை நீர்வளத்துறையின் 90 அணைகளிலும் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை குடிநீர் ஏரிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள 'ஸ்காடா' திட்டம் வெற்றிகரமாக செயல்படுகிறது. இதை மற்ற அணைகளுக்கும் விரிவுப்படுத்த ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணியை முடிக்க குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் ஆகும். திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால், அடர்த்த மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் உள்ள அணைகளை சென்னையில் இருந்தபடி கண்காணிக்க முடியும்.

மேட்டூர் அணையை பாசனத்திற்கு திறக்க, முதல்-அமைச்சர் நேரில் செல்ல வேண்டியது இல்லை. சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து, பட்டனை தட்டி மேட்டூர் அணையில் நீரை திறக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.