தூத்துக்குடி,
கோவில்பட்டியில் ஆட்டோவில் புகையிலைப் பொருட்கள் கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 37.5 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
புகையிலை பொருட்கள் கடத்தல்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொழில்பேட்டை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவைச் சோதனையிட்டபோது, அதில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
வாலிபர் கைது; 37.5 கிலோ புகையிலை, ஆட்டோ பறிமுதல்
இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அந்த நபர் கோவில்பட்டி லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் முருகராஜ் (வயது 24) என்று தெரியவந்தது. இதையடுத்து முருகராஜை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 37 கிலோ 500 கிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

