இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஷ்ருதி ஹாசன் நடிப்பில் அறிவியல் கனவைத் துரத்தும் படமாக வெளியாகி இருக்கிறது ஆகாயத்தில் ஒரு தாரகை எனும் ஏ ஓ டி.
சாலை வசதி கூட இல்லாத எளிய கிராமத்தில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார் சிறுமி கல்பனா (சாத்விகா). பள்ளிக்கூடத்தில் நடந்த அறிவியல் விண்வெளி கோலரங்க வகுப்பில் அறிவியல் செயற்பாட்டாளர் நாசர் சிறுமி கல்பனாவுக்கு விண்வெளி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். இதனால் உந்தப்பட்ட கல்பனா தான் ஒரு விண்வெளி வீரராக உருவாக ஆசைப்படுகிறார். என்ன தான் ஆசை இருந்தாலும் தன்னுடைய குடிகார தந்தையால் வலுக்கட்டாயமாக கிருஷ்ணாவுக்கு (துல்கர் சல்மான்) திருமணம் செய்து வைக்கப்படும் கல்பனாவின் கனவு அதன்பின் என்ன ஆனது? என்பதே ஏ ஓ டி திரைப்படத்தின் கதை.
இந்தியாவில் திரைப்படங்களாக மாறிய அறிவியல் கதைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படிப்பட்ட அந்தப் பட்டியலில் முக்கியப் படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது ஏ ஓ டி.
தங்களது கனவை துரத்தும் சாதாரண பெண்ணின் கதையை ஏற்கும்படி சரியான மீட்டரில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சதினேனி. கல்பனாவாக நடித்துள்ள சாத்விகாவின் நடிப்பு விண்வெளி வீரராக வேண்டும் எனும் லட்சியத்தை அணைய விடாத நெருப்பை படம் முழுக்க சுமந்திருக்கிறார். சாதாரண சிறுமி கதாபாத்திரம் தொடங்கி விண்வெளி வீரராக பரிணமிக்கும் பெண் வரை அவரின் நடிப்பு நம்மையும் ஈர்த்து விடுவது ஆச்சரியமளிக்கிறது. கேலி, ஏளனம், அவமானம் என அவர் சந்திக்கும் ஒவ்வொரு எதிர்மறை உணர்வுக்கும் அப்பாவிப் பெண்ணாக கலக்கியிருக்கிறார் சாத்விகா.
அவருக்கு உதவும் கணவனாக படம் முழுக்க ஓடிக் கொண்டே இருக்கிறார் கிருஷ்ணாவாக வரும் துல்கர் சல்மான். நடந்தது கட்டாயக் கல்யாணம் என தெரிந்த பிறகு குற்றவுணர்வுக்கு உள்ளாவது தொடங்கி மனைவிக்காக நிலக்கரி சுரங்க தொழிலாளியாக கஷ்டப்படுவது என நடிப்பில் நேர்மை சேர்ந்திருக்கிறார் அவர். இப்படிப்பட்ட கணவர் கூகுளில் தேடினாலும் கிடைக்க மாட்டார் என்றாலும் அதை தனது நடிப்பால் நம்ப வைத்து ஸ்கோர் செய்திருக்கிறார் துல்கர்.
இவர்களுடன் நடிகர்கள் நாசர், சின்னி ஜெயந்த், கெளதம் வாசுதேவ் மேனன், ருஹானி சர்மா, முரளி சர்மா என பலர் நடித்துள்ளனர். குஜராத் பெண்ணாக வரும் ருஹானி சர்மாவின் காட்சிகள் அழகாக இருக்கின்றன. விண்வெளி நிறுவன பெண்ணாக வரும் ஸ்ருதி ஹாசனின் நடிப்பு அவரைப் போலவே துறுதுறுவென அமைந்திருக்கிறது.
தன்னம்பிக்கை கதை என்பதை ஒரு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கொடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய அம்சம். எளிதில் நிறைவேறாத கனவை சுற்றி கதையை உருவாக்கி அதை பார்வையாளர்களும் விரும்பும் வகையில் சாத்தியப்படுத்த உருவாக்கப்பட்ட எழுத்து படத்திற்கு பலம். ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை, சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவும் படத்தை உயர்த்தியிருக்கிறது. ராக்கெட் உருவாக்கம், குஜராத் நிலக்கரி சுரங்க உலகம் என காட்சி ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சுஜித்.
முதல் பாதியில் தனது மனைவிக்காக துல்கர் எடுக்கும் முடிவு நம்பும்படியாக இல்லை எனினும் தொடர் காட்சிகள் அந்த குறையை தீர்த்து வைக்கின்றன. ஆனால் துல்கர் எப்படி இவ்வளவு நல்லவராக இருக்கிறார் என்பதையோ, தனது திருமணம் குறித்த எதுவுமே அவருக்கு எப்படி தெரியாமல் போனது என்பது குறித்த கேள்வி எழாமல் இல்லை. அமெரிக்க நிறுவனம் கதைக்குள் வருவது திணிக்கப்பட்ட அம்சமாக தோன்றுகிறது. தன்னுடைய மனைவி விண்வெளிக்கு செல்வது குறித்த அச்சம் ஆரம்பத்தில் துல்கருக்கு ஏற்படவே இல்லையா எனும் கேள்வியை கிளைமேக்சில் நமக்கும் ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம். நேரடி தெலுங்கு படம் என்பதால் தொடக்கக் காட்சிகள் சிலவற்றில் உதட்டு அசைவுகள் தமிழுக்கு பொருந்தாமல் அமைந்திருக்கின்றன.
எனினும் சின்னச் சின்னக் குறைகளைத் தாண்டி சாதாரண பெண்ணின் கனவை சுமந்து வந்திருக்கும் ஏ ஓ டி அனைவரும் காண வேண்டிய படம்.
