இம்பால்: மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் குடித்தவர்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சாக்பிகாரோங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் இம்பாலில் உள்ள ஜே.என்.ஐ.எம்.எஸ், ஆர்.ஐ.எம்.எஸ்), ஷிஜா மற்றும் பாபினா மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சூழ்நிலையை நேரில் ஆய்வு செய்யவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, முதல்வர் யும்நாம் கெம்சந்த் சிங் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஷிஜா மற்றும் பாபினா மருத்துவமனைகளுக்குச் சென்றார்.
இது குறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: "சண்டேல் மாவட்டத்தின் சாக்பிகாரோங் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலையை அறிவதற்காக, வெள்ளிக்கிழமை லாம்பேல்பட்டில் உள்ள ஷிஜா மருத்துவமனைக்கும், சஜிவாவில் உள்ள பாபினா மருத்துவமனைக்கும் நேரில் சென்று பார்த்தேன்."
"ஷிஜா மருத்துவமனையில் 140-க்கும் மேற்பட்டோரும், பாபினா மருத்துவமனையில் 41-க்கும் மேற்பட்டோரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஐ எட்டியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் மருத்துவப் பரிசோதனைகளும் தொடர் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், "சண்டேல் மாவட்டத்தில் சிகிச்சை மற்றும் அவசரக்கால நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, பொது மருத்துவ நிபுணர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அத்தியாவசிய மருந்துகளுடன் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தும்; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
ஷிஜா மருத்துவமனைகளின் இணை நிர்வாக இயக்குநர் சேத்தன் கே, செய்தியாளர்களுடன் பேசுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்குத் தலைச்சுற்றல், வயிற்று வலி மற்றும் பிற உடல்நலச் சிக்கல்கள் இருந்ததாகத் தெரிவித்தார்.
சில நோயாளிகளுக்கு ஹீமோடயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.
ஜே.என்.ஐ.எம்.எஸ் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறுகையில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலர், உள்ளூர் மதுவை அருந்தியிருப்பதால் அச்சம் காரணமாகவும் இங்கு சேர்ந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
ஷிஜா மருத்துவமனையில், மெத்தனால் நச்சுத்தன்மை காரணமாக இதுவரை 312-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள வருகிறது என்று தெரிவித்துள்ளது.
முதற்கட்ட அறிக்கைகளின்படி, நச்சுத்தன்மை கொண்டதாக சந்தேகிக்கப்படும் இந்த மது, காக்சிங் மாவட்டத்தில் உள்ள சுகுனு பகுதியில் வாங்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
சண்டேல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். ஓலிஷ் கூறுகையில், மேலும் பல நோயாளிகளை இம்பாலுக்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், இந்தச் சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அவர் உடனடியாக ஒப்புக்கொண்டு, ஷிஜா, பாபினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளதாக கூறினார்.
மேலும் அவர், குறிப்பாக சாக்பிகாரோங் பகுதியில் உள்ள கட்சித் தொண்டர்கள், நோயாளிகளை இம்பாலுக்கு அழைத்து வருவதற்கான வாகனங்களை ஏற்பாடு செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

