Revanth Reddy: அரசியல் வேறுபாடுகளால் காதலியின் குடும்பத்தினர் தன்னை ஏற்க மறுத்ததாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வெளிப்படையாக பேசியுள்ளார்.

ரேவந்த் ரெட்டியின் காதல் கதை

ABP நெட்வொர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்று குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பல்வேறு அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு காரசாரமாக பதிலளித்தவர், தனது மனைவி உடனான சுவாரஸ்யமான காதல் கதையையும் பகிர்ந்துள்ளார். சினிமாவை மிஞ்சிய திருப்பங்களுடன் கூடிய அவரது காதல் இளைஞர்களையும் கவர்ந்து, இணையத்தில் வைரலாகியுள்ளது.

Love knows no distance! Telangana CM Revanth Reddy once rode a motorcycle all the way from Andhra Pradesh to Delhi to win his future wife's hand in marriage. Watch the interesting story behind his unforgettable journey at https://t.co/6OgSeFpqT7 https://t.co/6u3zcnaFII

— ABP LIVE (@abplive) November 20, 2026

”பாத்ததும் பத்திக்கிச்சு”

காதல் தொடங்கி திருமணம் வரையிலான நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடனும் ரேவந்த் ரெட்டி பகிர்ந்துள்ளார். அதன்படி, ரேவந்த் ரெட்டி மாணவர் அரசியலில் தீவிரமாக களமாடிக்கொண்டிருந்த போது கீதா ரெட்டியைச் சந்தித்துள்ளார். நாகார்ஜுனசாகர் அணையில் ஒரு படகுப் பயணத்தின் போது இருவரும் முதல்முறையாக சந்தித்துள்ளனர். அந்த அறிமுகம் படிப்படியாக நட்பாகவும், பின்னர் காதலாகவும் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் காதலிற்கு ஆரம்பத்தில் குடும்ப ரீதியான தடைகள் ஏற்பட்டுள்ளன. அரசியல் பின்னணிகள் மற்றும் குடும்பங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் காரணமாக, கீதா ரெட்டியின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: https://tamil.abplive.com/entertainment/om-box-office-collection-day-1-dhanush-gets-his-highest-opening-after-beating-tere-ishk-mein-but-lags-behind-scene-cinema-news-280215

1750KM பைக்கிலேயே டெல்லிக்கு பயணம்:

அதோடு கீதா ரெட்டியை அவரது தாத்தாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த எஸ். ஜெய்பால் ரெட்டியிடம் டெல்லிக்கு அனுப்பப்பட்டார். இதனால்  திருமண விஷயத்தில் என்ன நடக்குமோ என்பது குறித்து இருவருக்கும் இடையே பதற்றம் உருவாகியுள்ளது. பிரிவானது  ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருந்தாலும், ரேவந்த் ரெட்டி தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. காதலியை சந்திப்பதோடு, ஜெய்பால் ரெட்டியைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க வைக்கும் நோக்கத்திலும், டெல்லியை நோக்கி பைக்கிலேயே தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.  ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தேசியத் தலைநகருக்கான 1,750 கிலோமீட்டர் தூரத்தை இருசக்கர வாகனத்திலேயே கடந்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு பின் திருமணம்:

டெல்லி சென்றடைந்து தனது காதலியை சந்தித்ததோடு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பிறகு அவரது தாத்தாவான ஜெய்பால் ரெட்டியையும் சந்தித்து, கீதாவை திருமணம் செய்துகொள்வதற்கான தனது விருப்பத்தை விளக்கமாக பேசியுள்ளார். அதன் பிறகு குடும்ப ரீதியிலான திருமணத்திற்கான தடைகள் முடிவுக்கு வந்துள்ளன. இறுதியாக, இரு குடும்பங்களின் சம்மதத்துடன், ரேவந்த் ரெட்டியும் கீதா ரெட்டியும்  1992, மே 7 அன்று திருமணம் செய்துள்ளனர். அதோடு தாத்தா- பாட்டி என்ற அந்தஸ்தை கூட பெற்றுள்ளனர். இந்த ஒட்டுமொத்த கதையையும் கூறிய பிறகு, 1990-களில் நடந்த சம்பவங்களை தற்போது ஒரு பொதுநிகழ்ச்சியில் இதற்கு மேல் வெளிப்படையாக விவரிக்க முடியாது என, ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

ரேவந்த் ரெட்டி குடும்பம்: 

1992ம் ஆண்டு திருமணமான ரேவந்த் ரெட்டி - கீதா தம்பதிக்கு நிமிஷா ரெட்டி எனும் ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு 2015ம் ஆண்டு சத்யநாராயணா ரெட்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அந்த தம்பதிக்கு 2023ம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தை மூலம் ரேவந்த் ரெட்டி தாத்தாவானார்.