செங்குன்றம்: செங்குன்றம் அருகே உள்ள மணல் யார்டுகளில் கடற்கரை மணல் ஆற்று மணலுடன் கலந்து விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து கனிம வளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு கடந்த நவ.16-ம் தேதி அதிரடி ஆய்வு நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக 19 மணல் யார்டுகளுக்கு வருவாய்த் துறையினர் `சீல்' வைத்தனர். அதன் தொடர்ச்சியாக, பொன்னேரி கோட்டாட்சியர் மணியரசன் தலைமையில் நேற்று முன்தினம் கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் ராமஜெயம், பொன்னேரி வட்டாட்சியர் ஜெய்கர்பிரபு உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பாடியநல்லூர், நாரவாரிகுப்பம், புள்ளிலைன், வடகரை, அழிஞ்சிவாக்கம் மற்றும் கிராண்ட்லைன் ஆகிய பகுதிகளில் உள்ள மணல் யார்டுகளில் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், 12 யார்டுகள் அனுமதியின்றி செயல்பட்டு வந்ததோடு, கலப்பட மணலை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 12 மணல் யார்டுகளில் இருந்த ஆற்றுமணல், கடற்கரை மணல், எம்-சாண்ட், கலப்பட மணல், ஜல்லிக் கற்கள் உள்ளிட்ட 6,950 டன் கனிமங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
தொடர்ந்து, 12 மணல் யார்டுகளுக்கு வருவாய்த் துறை அதிரடியாக, `சீல்’ வைத்தனர். மேலும், 12 மணல் யார்டுகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழிகாட்டி நிறுவன ஊழியர்கள் பெருமளவில் ராஜினாமாவா? - தமிழக அரசு விளக்கம்
