வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததை தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.

இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க.வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

முதல் முறை இடைத்தேர்தல்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.வாக இருந்த வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் 70 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியாகி உள்ளது. இதனால், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.

தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் புரசைவாக்கம் தொகுதி பிரிக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி கடந்த 2008-ம் ஆண்டு உருவானது. அதைத் தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை இந்த தொகுதி சந்தித்து வருகிறது.

3 முறை மு.க.ஸ்டாலின் வெற்றி

இதில் 2011, 2016, 2021-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு 3 முறை தொடர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2011-ம் ஆண்டு தேர்தலில் 68 ஆயிரத்து 677 வாக்குகள் பெற்று 2 ஆயிரத்து 734 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமியை தோற்கடித்தார்.

2016-ம் ஆண்டு தேர்தலில் மு.க.ஸ்டாலின் 91 ஆயிரத்து 303 வாக்குகள் பெற்று தனக்கு எதிராக போட்டி யிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரை (தற்போதைய சபாநாயகர்) 37 ஆயிரத்து 730 வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2021-ம் ஆண்டு தேர்தலில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 522 வாக்குகள் பெற்ற மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. வேட்பாளர் ஆதிராஜாராமை 70 ஆயிரத்து 384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சரானார்.

முற்றுப்புள்ளி

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினின் ஹாட்ரிக் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2026 தேர்தல் முடிவுகள் அமைந்தன. முதலமைச்சராக இருந்த அவர், 4-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் களம் கண்டபோது, அவரை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்ட தனது முன்னாள் ஆதரவாளரான வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

த.வெ.க. வேட்பாளரான வி.எஸ்.பாபு 82 ஆயிரத்து 997 வாக்குகளை பெற்று கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வானார். மு.க.ஸ்டாலின் 74 ஆயிரத்து 202 வாக்குகள் பெற்று 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

தி.மு.க.வினர் விருப்பம்

இந்தநிலையில் வி.எஸ்.பாபு மரணம் அடைந்ததால் கொளத்தூர் தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறது.

இப்போது இருக்கும் சூழல் தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும். எனவே கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க.வினர் விரும்புகின்றனர்.

இதை கோரிக்கையாகவும் முன்வைக்கின்றனர். ஆனால் மு.க.ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.