திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
தொல்லியல் துறையினர் அனுமதியுடன் கோயில் நிர்வாகம் தரப்பினர் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகம், தமிழக அரசு, தர்கா நிர்வாகம் தரப்பிலும், தீபம் ஏற்ற பொதுமக்களை அனுமதிக்க மறுத்த ஷரத்தை எதிர்த்து ராம ரவிக்குமார் என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜெய்தீப் குப்தா, சேகர் நாப்டே, கோபால் சங்கரநாராயணன், பிரசாந்தோ சந்திர சென் ஆகியோர் ஆஜராகி வாதிட்டதாவது:
கடந்த 1923-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், மலைப் படிக்கட்டு பகுதி மற்றும் நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகள் தர்காவின் கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடியவை என்பது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றமும் இதை உறுதி செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கோயிலில் தீபம் ஏற்றப்படுவது என்பது 150 ஆண்டு கால வரலாறாகும், இதற்கான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.
கடந்த 1994-ம் ஆண்டு இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மலை மீது ஏறி தன்னிச்சையாக தீபம் ஏற்றுவோம் என அறிவித்தபோது, அது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘வெளி ஆட்கள் யாரும் மலை மீது ஏறி தீபம் ஏற்றக்கூடாது’ என உத்தரவிட்டது.
இந்த விவகாரம், இந்து மதம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இஸ்லாமியர்களின் மத வழிபாட்டு உரிமையும் பறிக்கப்படக் கூடாது, அவர்களின் உணர்வுகள் புண்படக்கூடாது என்பதும் இதில் அடங்கியுள்ளது என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது
நூறாண்டுகளுக்கு மேலாக எந்த மதரீதியிலான மோதல்களும் இன்றி வழக்கமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. சட்டம்-ஒழுங்கை மாநில அரசு பார்த்துக் கொள்ளும் என்றாலும், நீதிமன்ற உத்தரவுகளால் சமூகத்தில் எந்த சலசலப்பும், பதற்றமும் ஏற்பட்டுவிடக் கூடாது.
இன்னும் ஒரு வாரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளதால், தேவையற்ற சச்சரவுகளை தவிர்க்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
இதற்கு பதிலளித்து வாதிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், “திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் விளக்கு ஏற்றுவது என்பது மிகவும் சாதாரணமான நடைமுறைதான். இதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. எனவே, பக்தர்களை நேரடியாக தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.
அருப்புக்கோட்டை: மனைவி, கட்டிட தொழிலாளியை கொன்ற இளைஞர் கைது
