சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பக்தர்களிடம் முறைகேடாக வசூலிக்கப்பட்ட ரூ.59,600 பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பக்தர்களிடம் முறைகேடாகவும் கட்டாயப்படுத்தியும் பணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. அத்துடன், கோயிலில் அண்மையில் ரூ.60 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
அதையடுத்து, விருதுநகர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்களிடம் முறைகேடாக வசூலித்த 32 பணியாளர்களிடம் இருந்து ரூ59,600 பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ரூ.60 கோடியில் நடைபெற்ற திருப்பணிகள் விவரம் குறித்து கோயில் அலுவலகத்திலும், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தியிடமும் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.
எழுதாத விடைத்தாளுக்கு எப்படி மதிப்பெண் தருவது? - தமிழிசை கருத்து
