சென்னை: திருவேற்காடு பகுதிகளில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதாகக்கூறி வழக்கறிஞர் காமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், சாலைகளில் கேட்பாரின்றி சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்ய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தரப்பில் கடந்த செப்.20 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவேற்காடு நகராட்சி நிர்வாகமும் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி பொது போக்குவரத்துக்கு இடையூறாகத் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு முதன்முறை ரூ. 2 ஆயிரமும், அடுத்தமுறை ரூ. 5 ஆயிரமும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாலைகளில் திரியும் கால்நடைகளுக்கு 48 மணி நேரத்துக்குள் யாரும் உரிமை கோராவிட்டால், அவற்றை பறிமுதல் செய்து ஏலம் விடலாம். கால் நடைகளின் உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக திருவேற்காடு நகராட்சி நிர்வாகம் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து ஏலம் விட வேண்டும் அவைகளுக்கான பராமரிப்பு செலவை உரிமையாளரிடம் வசூலிக்க வேண்டும்.
போலீஸார் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யலாம். இந்த உத்தரவை டிஜிபி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் 4 வார காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும்.
காமராஜர் துறைமுகம், சென்னை துறைமுக ஆணையத்தின் ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2026’ நிறைவு
