விழுப்புரம்: மாவட்ட ஆட்சியருக்கு அநீதி இழைத்த தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்காதது மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிக்காத தவெக அரசைக் கண்டித்தும் அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் குமரகுரு தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வளர்மதி கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் செய்ததை, ‘தவறு’ என்று முதல்வர் விஜய் சொல்லவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதையெல்லாம் முதல்வர் பார்த்திருப்பார். ஆனால், மாமல்லபுரத்துக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷை அழைத்து பேசியிருக்கிறார்.
ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதை கண்டிக்காமல், அவருக்கு பட்டு வேட்டி கொடுத்து அனுப்புகிறார். ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோர் முதல்வராக இருந்திருந்தால், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் நம்பியாரை எம்ஜிஆர் சவுக்கால் வெளுப்பதுபோல் அந்த எம்எல்ஏவை வெளுத்து வாங்கி அனுப்பி இருப்பார்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ‘234 தொகுதிகளிலும் நான்தான் வேட்பாளர், எனக்கு வாக்கு அளியுங்கள், என்ன தவறு நடந்தாலும் நான்தான் பொறுப்பு’ எனக் கூறியவர் முதல்வர் விஜய். ‘என்னை நம்பித்தான் மக்கள் வாக்களித்துள்ளனர்’ என்று கூறினார். கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவுக்கு மக்கள் வாக்களித்தது, ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்புவதுவரை சென்றுள்ளது.
‘எனக்கு விழுந்த வாக்கு, என்னைப் பார்த்து விழுந்த வாக்கு’ என்று நீங்கள்தானே சொன்னீர்கள் முதல்வரே, உங்களைப் பார்த்து விழுந்த வாக்கு என்றால், இப்படிப்பட்ட தவறை செய்த உங்கள் கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் ராஜினாமா செய்யுங்கள். இவ்வாறு வளர்மதி பேசினார்.
‘நான் நிஷாந்த் பேசுறேன்’... ஒற்றை வார்த்தையால் உஷாரான ஓட்டுநர்: ஆம்னி பஸ்சை போலீஸார் சுற்றிவளைத்தது எப்படி?
