சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த கூலி தொழிலாளி சக்திவேல் மீது வேன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொட்டாயூரை சேர்ந்தவர் சக்திவேல் (47). கட்டிட கூலி வேலை செய்து வரும் இவரும் இவருடன் வேலை செய்யும் அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன்(35) மற்றும் அம்மாபேட்டையை அடுத்த ஒலகடத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ்(35) ஆகிய மூன்று பேரும்‌ கொளத்தூர் பகுதியில் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

விபத்து

மோட்டார் சைக்கிளை ஜெயபிரகாஷ் ஓட்டி வந்தார். பிரபாகரனும் சக்திவேலும் பின்னால் அமர்ந்து வந்தனர். அப்போது அம்மாபேட்டை அருகே கொமரயனூர் அடுத்துள்ள தொட்டி கிணறு என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த வேன் எதிர்பாராத விதமாக சக்திவேல் மீது உரசியதால் மூணு பேரும் கீழே தூக்கி வீசப்பட்டனர். இதில் சக்திவேல் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்ற இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளித்திருப்பபூர் போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.